பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம்.. ஆளுநர் vs தமிழக அரசு.. நடப்பது என்ன?
தமிழக பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பதில் மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் ஏழாம் பொருத்தமாகவே உள்ளது. துணை வேந்தர் நியமனத்தில் அப்படி என்ன சிக்கல் நிலவுகிறது என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
தமிழக பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பது தொடர்பான தேடுதல் குழுவில் பல்கலைக்கழக ஆட்சிக் குழுவின் உறுப்பினர், ஆளுநர் மற்றும் அரசால் பரிந்துரைக்கப்படும் நபர்கள் என மூன்று பேர் இடம் பெறுவர். இந்தக் குழு பரிந்துரைக்கும் நபரை துணை வேந்தராக ஆளுநர் நியமிப்பார். இந்நிலையில் 2023ஆம் ஆண்டு காலியான பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களை நியமிக்க மூன்று பேர் கொண்ட தேடுதல் குழுவை நியமித்து தமிழக அரசு அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது.
இதனிடையே இந்த தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் பரிந்துரைத்த நபரை நியமித்து ஆளுநர் அறிவிப்பு வெளியிட்டார். மேலும், தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் பரிந்துரைக்கும் நபரை இணைத்து அரசிதழில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என முதலமைச்சருக்கு, ஆளுநர் கடிதம் எழுதி இருந்தார்.
இதற்கு அந்தந்த பல்கலைக்கழக சட்ட விதிகளின் கீழ் தேடுதல் குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் பரிந்துரைக்கும் உறுப்பினரை ஆய்வுக் குழுவில் சேர்த்து தேடுதல் குழுவை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு எழவில்லை என்று பதில் கடிதம் அனுப்பப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில், ஆளுநர் தனது அறிவிப்பாணையை திரும்பப் பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணை வேந்தரை தேர்வு செய்வதற்காக தமிழ்நாடு அரசு அமைத்துள்ள தேடுதல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதி இல்லாததால், அந்தக் குழுவை கலைத்து, புதிய குழுவை அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஆளுநர் ரவி அறிவுறுத்தி இருந்தார்.
துணை வேந்தர் நியமனம் தொடர்பான 3 பேர் கொண்ட தேடுதல் குழுவை அமைத்தது சட்டப்படி சரி என்றும் யு.ஜி.சி.யின் நெறிமுறைகள் வழிகாட்டுதல்களே தவிர அவற்றை ஏற்று நான்காவது நபரை நியமிப்பது அரசின் முடிவுக்கு உட்பட்டது எனவும் அமைச்சர் கோவி செழியன் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் கோவி.செழியன் மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், துணை வேந்தர் நியமனத்தில் ஆளுநர் அரசியல் செய்வதை தவிர்த்து பல்கலைக்கழகங்கள் கல்வி பணியாற்ற வழி விட வேண்டும் என கூறியுள்ளார். ஆளுநரின் தொடர் தலையீட்டால் பல்கலைக்கழக நிர்வாகங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் மாநில பல்கலைக்கழகங்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதி குறைந்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
துணை வேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவது சரியல்ல என்று கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார். துணைவேந்தர் நியமன விவகாரத்தில் தமிழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடி தீர்வு காண வேண்டும் என்றும் ஜெயபிரகாஷ் காந்தி வலியுறுத்தியுள்ளார்.