TNPSC: தேர்வர்கள் கவனத்திற்கு.. பாடத்திட்டத்தில் புதிய மாற்றம் செய்த டிஎன்பிஎஸ்சி - இந்த அப்டேட் தெரியுமா?
குரூப் 2, குரூப் 4 பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவந்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம், தற்போது அடுத்த மாற்றத்தை அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி, குரூப்-1 முதல்நிலைத் தேர்வின் பொது அறிவுப் பிரிவில், 6 பாடங்களில் இருந்து கேள்விகள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 9 பாடங்கள் இருந்த நிலையில் தற்போது 3 பாடங்கள் குறைக்கப்பட்டு, 6 பாடங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் இம்முறை இடம்பெறுகின்றன.
அதிகபட்சமாக இந்திய பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சி நிர்வாகம் குறித்த பாடங்களில் இருந்து 50 கேள்விகள் கேட்கப்படும் எனவும், அதற்கு அடுத்தபடியாக இந்திய ஆட்சியியல் பாடத்தில் இருந்து 40 கேள்விகளும், தமிழ்நாட்டின் வரலாறு-பண்பாடு, அரசியல் இயக்கங்கள் பாடத்தில் இருந்து 40 கேள்விகளும் கேட்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
பொது அறிவு பிரிவில் மொத்தம் 175 கேள்விகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல் தொழில்நுட்ப பாடத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவுப் பிரிவில் இருந்து மொத்தம் 25 கேள்விகள் கேட்கப்படும் எனவும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
வருடாந்திர அட்டவணைப்படி, குரூப் 1 தேர்வுக்கான அறிவிக்கையை வரும் ஏப்ரல் மாதம் வெளியிட்டு, முதல்நிலைத் தேர்வை ஜூன் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.