ரூ.85க்கு விற்கப்படும் வீடுகள்.. எங்கு தெரியுமா? - வெளியான அதிர்ச்சி காரணம்!

homes-sold-for-85-rupees-in-italy-what-is-the-reason-nw-asg-ws-b
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-12-19 15:50:00

இத்தாலியில் மக்களின் இடப்பெயர்வு காரணமாக காலியாகி வரும் சிறுநகரங்கள், வாழிடத்தை மேம்படுத்த வெளிநாட்டவருக்கு வெறும் 85 ரூபாய்க்கு வீடுகள் விற்கப்படுகின்றன. இதுகுறித்து தற்போது விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

தூர தேசத்துக்கு சென்று இயற்கை அழகு கொஞ்சும் இடத்துக்கு நடுவே எந்த ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமின்றி ஒரு எளிமையான வாழ்க்கை. இதுதான் தற்போது இயந்திர நகர வாழ்க்கைக்குள் உழன்று கொண்டு இருக்கும் பலரின் ஏக்கமாகவும் கனவாகவும் இருக்கும். அப்படி ஒரு வாழ்க்கையை வெறும் 85 ரூபாய்க்கு தருகிறோம் என்கிறார்கள் இத்தாலியின் சிறு நகர நிர்வாகங்கள். பெருநகரங்களுக்கு மக்கள் குடிபெயர்ந்ததால், சிறுநகரங்கள் பொலிவை இழந்து வருகின்றன. இதற்கு தீர்வாக வாழ்விடங்களை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை நகர நிர்வாகங்கள் தீவிரப்படுத்தி உள்ளன.

அதன் ஒரு பகுதியாக சிசிலியில் உள்ள முசோமெலி, காம்பானியாவில் உள்ள சுங்கோலிசம்புகா உள்ளிட்ட சிறுநகரங்கள், சுமார் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்கள் பழமையான வீடுகளை குறைந்த விலைக்கு விற்று வருகின்றன. இந்த ஏலத்தில் பங்கேற்க முதலில் இந்திய மதிப்பில் நான்கரை லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். ஒருவேளை ஏலத்தில் தோற்றுவிட்டால் அந்த தொகை திருப்பி வந்துவிடும். ஒரு இடத்தை அதிக தொகைக்கு ஏலம் கேட்பவருக்கு அந்த இடம் விற்பனை செய்யப்படும். டெபாசிட் தொகையில் விற்பனைத் தொகை கழித்துக்கொள்ளப்படும். வரி விலக்கும் தரப்படும்.

இந்த தள்ளுபடி வீடு விற்பனையில் உள்ள முக்கிய நிபந்தனை, வீட்டை வாங்கிய 3 ஆண்டுகளுக்குள் மறுகட்டமைப்பு செய்து புதுப்பொலிவுடன் மாற்றவேண்டும். அப்படி செய்யாமல் கிடப்பில் போட்டுவிட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். பணமும் திருப்பி வராது. அப்படி வீட்டை சுத்தம் செய்வதும் எளிதான காரியம் இல்லை என்கிறார்கள் வீட்டை வாங்கியவர்கள். அமெரிக்காவைச் சேர்ந்த மெரிடித் டபோன் (Meredith Tabbone), இத்தாலியின் சம்புகாவில் (Sambuca) 90 ரூபாய்க்கு ஒரு வீட்டை வாங்கினார். மின்சாரம், தண்ணீர் வசதி உள்ளிட்ட எதுவும் இல்லாத, சுமார் 2 அடி உயரத்துக்கு புறா கழிவுகள் நிறைந்த வீட்டை புதுப்பிக்க சில பல லட்சங்கள் ஆகும் என்று நினைத்திருந்தார். ஆனால், 4 ஆண்டுகளில் ஆன செலவோ சுமார் 4 கோடி ரூபாய்.

அதே சமயம், புத்தாக்கம் பெற்ற சொந்த வீட்டின் பால்கனியில் நின்று ஒரு பக்கம் மலை, மற்றொரு பக்கம் கடல் என இயற்கை அழகை ரசித்தபடி பருகும் ஒரு தேநீருக்கு, இதுபோல் எவ்வளவு கஷ்டத்தையும் சமாளிக்கலாம் என்கிறார்கள் அங்கு புதிதாக குடியேறியவர்கள்.

Ads
Recent International News
Trending News
Recent News
Prev
Next