இளைஞர்களே.. ஒரு வருட பயிற்சியுடன் ரூ.5,000 உதவித்தொகை: PM இன்டர்ன்ஷிப் திட்டம் தெரியுமா.. எப்படி விண்ணப்பிப்பது?
பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் 2024-ல் சேர, யார் தகுதியானவர்கள், பதிவு செய்வதற்கான கடைசி தேதி மற்றும் PM இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கு (PMIS) ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் (PMIS) 2024 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அடுத்த 5 ஆண்டுகளில், இந்த திட்டம் 10 மில்லியன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் இளைஞர்களுக்கு உலக வணிக அமைப்புகளில் நடைமுறை அனுபவத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்தியாவின் சிறந்த 500 நிறுவனங்களுடனான 12 மாதம் இன்டர்ன்ஷிப் மூலம் இது சாத்தியமாகும். PM இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிக்க நவம்பர் 10 ஆம் தேதியுடன் கால அவகாசம் நிறைவடைகிறது. உங்கள் எதிர்காலத்தை வடிவமைக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சகம் தனது எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளது.
பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் என்றால் என்ன?
பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் என்பது இளைஞர்களுக்கு இந்தியாவின் சிறந்த 500 நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்திய அரசின் ஒரு சிறந்த முயற்சியாகும். இந்தத் திட்டம் இளைஞர்களுக்கு பல்வேறு துறைகளில் உள்ள வணிகச் சூழல்களை வெளிப்படுத்தி, மதிப்புமிக்க திறன்களையும் பணி அனுபவத்தையும் பெற உதவுகிறது.
PM இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?:
PM இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கான விண்ணப்ப செயல்முறை முற்றிலும் ஆன்லைனில் உள்ளது.
Register விருப்பத்தை கிளிக் செய்யவும். புதிய பக்கம் திறக்கும்.
registration விவரங்களை நிரப்பவும்.
e-KYC சரிபார்க்கவும். தனிப்பட்ட விவரங்கள், தொடர்பு விவரங்கள், வங்கி விவரங்கள், திறன்கள் மற்றும் மொழிச் சான்றிதழுடனான CV உடன் சுயவிவரத்தை உருவாக்குவதற்கு இது கட்டாயமாகும்.
Submit பட்டனை கிளிக் செய்யவும்.
இது பதிவு செய்யப்பட்டதும், வெவ்வேறு நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் இன்டர்ன்ஷிப்களைத் தேடி, உங்கள் ஆர்வம் மற்றும் திறனுக்கு ஏற்ற வேலைகளுக்கு விண்ணப்பிக்கவும். ஆன்லைன் சோதனைகள் அல்லது நேர்காணல்களை உள்ளடக்கிய கூடுதல் மதிப்பீட்டிற்காக நிறுவனங்கள் பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களுடன் தொடர்பு கொள்ளும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க நவம்பர் 10ஆம் தேதி கடைசி நாளாகும். இதுதொடர்பான கூடுதல் தகவல்களை அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், ஐடி மற்றும் மென்பொருள் மேம்பாடு, வங்கி மற்றும் நிதிச் சேவைகள், எண்ணெய், எரிவாயு மற்றும் ஆற்றல், உலோகம் மற்றும் சுரங்கம், FMCG (Fast-Moving Consumer Goods), தொலைத்தொடர்பு, உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானம், சில்லறை மற்றும் நுகர்வோர் நீடித்த பொருட்கள், சிமெண்ட் மற்றும் கட்டடப் பொருட்கள், வாகனம், மருந்து, விமானம் மற்றும் பாதுகாப்பு, உற்பத்தி மற்றும் தொழில்துறை, ரசாயனம், ஊடகம், பொழுதுபோக்கு மற்றும் கல்வி, விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆலோசனை சேவைகள், ஜவுளி உற்பத்தி, நகைகள், சுகாதாரம் உட்பட பல்வேறு துறைகளில் இன்டர்ன்ஷிப்களைப் பெறுவார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்தியா முழுவதிலும் உள்ள சிறந்த 500 நிறுவனங்களுடன் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பை பெறுவார்கள். இந்தத் துறையில் முன்னணி நிறுவனங்களுடன் பயிற்சி பெறுவது மதிப்புமிக்க அனுபவத்தை பெறவும், புதிய திறன்களை பெறவும், முக்கியமான தொழில்முறை நெட்வொர்க்குகளை உருவாக்கவும் உங்களை அனுமதிக்கும்.
இன்டர்ன்ஷிப்பின் காலம் என்ன?
PM இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ், ஒரு வருடத்திற்கு (12 மாதங்கள்) பயிற்சிகள் வழங்கப்படும்.
வேலை கிடைக்குமா?
PM இன்டர்ன்ஷிப் திட்டம், இந்தியாவில் உள்ள சிறந்த நிறுவனங்களுடன் பணிபுரிவதன் மூலம், திறன்களை கற்றுக்கொள்ளவும் மேம்படுத்தவும் ஒரு மதிப்புமிக்க வாய்ப்பை வழங்குகிறது. இந்தத் திட்டம் முடிவடைந்தவுடன் வேலைக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை என்றாலும், பயிற்சியின் போது நீங்கள் பெறும் அறிவு, நடைமுறை அனுபவம் மற்றும் தொழில்முறை நெட்வொர்க்குகள் ஆகியவை தொழில் வாய்ப்புகளை கணிசமாக மேம்படுத்தும்.
PM இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கு யார் விண்ணப்பிக்கலாம்?
• நீங்கள் ஒரு இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். • நீங்கள் 21-24 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும். • நீங்கள் முழுநேர வேலை அல்லது முழுநேர படிப்பில் சேர்த்திருக்க கூடாது. • நீங்கள் உங்கள் பள்ளிச் சான்றிதழ் (SSC) அல்லது அதற்குச் சமமான HSC சான்றிதழ் அல்லது ITI, பாலிடெக்னிக் நிறுவனத்தில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு பட்டம் பெற்றிருக்க வேண்டும். BA, B.Sc, B.Com, BCA, BBA, B.Pharma ஆகியவை இதில் அடங்கும்.
தேவையான ஆவணங்கள்?
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் பதிவு செய்யும்போது பின்வரும் ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும்.
• ஆதார் அட்டை • கல்விச் சான்றிதழ்கள் • Passport-Size புகைப்படம்
இன்டர்ன்ஷிப் - நிதி உதவி கிடைக்குமா?
இன்டர்ன்ஷிப்பில் சேர்ந்த பிறகு, ஒவ்வொரு பயிற்சியாளரும் 12 மாதத்திற்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.5,000 பெறுவார்கள். இந்தத் தொகையில் பயிற்சியாளரின் வருகை மற்றும் நன்னடத்தை தொடர்பான நிறுவனக் கொள்கைகள் போன்றவற்றின் அடிப்படையில், பங்குதாரர் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.500 வெளியிடும். நிறுவனம் பணம் செலுத்தியவுடன், விண்ணப்பதாரருக்கு நேரடிப் பலன் பரிமாற்றத்தின் மூலம் அரசாங்கம் ரூ.4,500 செலுத்தும். பயிற்சியாளரின் ஆதார் பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
கூடுதலாக, இந்திய அரசாங்கத்தின் காப்பீட்டுத் திட்டங்களான பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா ஆகியவற்றின் கீழ், ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். அதற்கான பிரீமியம் தொகை இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும்.