எங்களால் ஆட்சியை பிடிக்க முடியாது.. பகிர்ந்து கொள்ள தான் முடியும் - திருமாவளவன்
2026 சட்டமன்றத் தேர்தலில் விசிக எந்தக் கூட்டணியில் போட்டியிடும் என்பது பற்றி அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசிய கட்சித் தலைவர் விஜய், கூட்டணி ஆட்சிக்குத் தயார் என்று அறிவித்தார். அப்போது முதல் அக்கட்சியுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி அமைக்குமா என்ற விவாதங்கள் எழுந்தன.
இந்நிலையில், வரும் டிசம்பர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள புத்தக வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவனும், தவெக தலைவர் விஜயும் இணைந்து பங்கேற்க இருப்பதாக வெளியான தகவல் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், விஜயுடன் இணைந்து நிகழ்ச்சியில் பங்கேற்பதா?, வேண்டாமா? என்பதை அரசியல் சூழலை கருத்தில் கொண்டு முடிவு செய்ய இருப்பதாக கூறினார். கூட்டணி விவகாரம் தொடர்பாக அவர் கூறியதாவது, விசிகவின் நம்பகத்தன்மையை சிதைக்க சிலர் முயற்சிக்கின்றனர். கூட்டணி தொடர்பாக பேசுவதற்கோ, வேறு கூட்டணிக்கு செல்வதற்கோ எந்த தேவையும் எழவில்லை என்றார்.
மேலும், கூட்டணியை உருவாக்கியதில் விசிகவுக்கு பங்கு இருப்பதாகவும், கூட்டணி தற்போது வெற்றிகரமாக இயங்கி வருவதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தான் விசிக இருக்கும் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
இதனிடையே ஒரு நாளிதழுக்கு திருமாவளவன் அளித்த பேட்டியில், தற்போதைக்கு ஆட்சி அதிகாரத்தில் விசிக பங்கு கேட்க முடியாது. தமிழ்நாட்டில் தங்களால் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது, ஆட்சியை பகிர்ந்து கொள்ள மட்டுமே முடியும். கூட்டணிக்கு அதிக வாக்குகளை பெற்றுத் தந்தால் மட்டுமே பெரிய அரசியல் சக்தியாக தங்களை அடையாளப்படுத்த முடியும். அவ்வாறு, பெரும் அரசியல் சக்தியாக மாறும் வரை, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.