IPL மெகா ஏலத்தில் பங்கேற்பதை தவிர்த்த முன்னாள் சிஎஸ்கே வீரர்.. என்ன காரணம் தெரியுமா?
இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டனான பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கவில்லை. 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான மெகா ஏலம் வரும் 24 மற்றும்25 ஆம் தேதி ஜெட்டா நகரில் நடைபெற இருக்கிறது.
இந்த ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவிக்கும் வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் 1574 வீரர்களின் பெயர்கள் இடம்பிடித்துள்ளன. இந்த பட்டியலில் பென் ஸ்டோக்ஸ் பெயர் இடம்பெறவில்லை. அதேநேரம் 42 வயதாகும் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது அடிப்படை விலை 1 கோடியே 25 லட்சம் ரூபாய் என பதிவு செய்துள்ளார்.
பணி அதிகம் இருப்பதால் கடந்தாண்டு ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் பென் ஸ்டோக்ஸ் விலகியிருந்தார். ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்யாத வெளிநாட்டு வீரர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாது என்ற புதிய விதி உள்ளது. இதனால் பென் ஸ்டோக்ஸ் 2026 ஐபிஎல் போட்டிகளிலும் விளையாட முடியாது.
2023 ஆம் ஆண்டின்போது ன் ஸ்டோக்ஸ் சென்னை அணிக்காக விளையாடினார். இங்கிலாந்தின் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் பென் ஸ்டோக்ஸ், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் முழு கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக அடுத்து நடைபெறவிருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்கிற முனைபில் பென் ஸ்டோக்ஸ் இருப்பதால் அவர் இந்த ஐபிஎல் தொடரை தவிர்த்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
நடைபெறவுள்ள ஐபிஎல் மெகா ஏலத்தில் 204 வீரர்கள் 10 அணிகளால் எடுக்கப்படவுள்ளனர். ஒட்டு மொத்தமாக ரூ. 641.5 கோடி வரை 10 அணிகள் வீரர்களுக்காக செலவு செய்யலாம். ஏலத்தில் எடுக்கப்படும் 204 வீரர்களில் 70 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.