பின்தங்கினார் கமலா... வரலாற்று வெற்றி... இரண்டாம் முறையாக அமெரிக்க அதிபராகிறார் டொனால்ட் டிரம்ப்!
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாம் முறையாக டொனால்ட் டிரம்ப் அதிபராகிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற 270 எலக்டோரல் வாக்குகளுக்கு அதிகமாக பெற வேண்டும். அந்நாட்டு தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இதுவரை வெளியான முடிவுகளில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் 267 எலக்டோரல் வாக்குகளை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 224 எலக்டோரல் வாக்குகள் மட்டுமே பெற்று பின்தங்கியுள்ளார். வாக்குகள் எண்ணப்பட்டு வரும் ஐந்து மாநிலங்களிலும் டிரம்ப் முன்னிலையில் உள்ளதால் அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
51 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வாக்கு சதவீதத்திலும் டிரம்ப் முன்னிலையில் உள்ளார். நெவாடா, அரிசோனா, விஸ்கான்சின் உள்ளிட்ட சில மாகாணங்களில் மட்டுமே இன்றும் தேர்தல் முடிவுகள் வெளியாகவில்லை.
அமெரிக்க அதிபர் தேர்தலில், வெவ்வேறு மாகாணங்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
வடக்கு விர்ஜினியா மாகாணத்தின் 10 ஆவது மாவட்டத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளரான இந்திய வம்சாவளியை சேர்ந்த சுஹாஸ் சுப்ரமணியம் வெற்றி பெற்றுள்ளார். இவர் ஒபாமா ஆட்சியின் போது, தொழில்நுட்பக் கொள்கை ஆலோசகராக பணியாற்றினார்.
இதே போன்று, இல்லினாய்ஸ் மாகாணத்திலும் ஜனநாயக கட்சி வேட்பாளரான இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் மார்க் ரைசை விட 57 புள்ளி ஒன்று சதவீத வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியை வசப்படுத்தினார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபராக தேர்வுசெய்யப்பட்ட டொனால்டு டிரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “வரலாற்றுப்பூர்வ தேர்தல் வெற்றிக்காக நண்பர் டொனால்டு டிரம்புக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
தங்களது முந்தைய ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்திய, இந்தியா - அமெரிக்கா இடையேயான விரிவான உலகளாவிய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாகவும், உலக அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளத்துக்காக ஒருங்கிணைந்து பணியாற்றுவோம் என்றும் மோடி உறுதியளித்துள்ளார்.