அம்பிகை அனுஷ்டித்த கேதார கவுரி விரதம்

kethara-gowri-viratham-observed-by-goddess-parvati
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-11-30 20:14:00

முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும் சிவனையும், பார்வதியையும் சேர்த்து வழிபட்டு வந்தனர். ஆனால் பிருங்கி மகரிஷி மட்டும் பார்வதியை தவிர்த்துவிட்டு, சிவனை மட்டுமே வணங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் வருத்தம் கொண்ட பார்வதி, அதுபற்றி சிவபெருமானிடம் கேட்டார். அதற்கு ஈசன், "தேவி.. பிருங்கி முனிவருக்கு, எந்த பாக்கியங்களும் தேவையில்லை. அவருக்கு மோட்சம்தான் விருப்பம். எனவேதான் அவர் என்னை மட்டும் சுற்றி வந்து வழிபடுகிறார்" என்று விளக்கம் அளித்தார்.

சிவபெருமான் சொன்ன விளக்கத்தில், பார்வதிக்கு திருப்தி ஏற்படவில்லை. எனவே அவர் பிருங்கி முனிவரிடமே நேரடியாக கேட்டார், "உன் தேகத்திற்கு தேவையான சக்தி அனைத்தும் நான் வழங்கியவை. ஆனால் என்னை வழிபட மறுக்கிறாய். அப்படியானால் சக்திக்கு தேவையான ரத்தம், தசை, நரம்பு போன்றவற்றை திருப்பிக்கொடு" என்றார் பார்வதி.

பிருங்கி முனிவரும் அப்படியே செய்தார். இதனால் எலும்பும், தோலும் மட்டும் கொண்டு வலுவிழந்து தடுமாறினார். சிவபெருமான் அவருக்கு கைத்தடி ஒன்றை வழங்கி நிற்கச் செய்தார். இதனால் கோபம் கொண்ட பார்வதி, கயிலாயத்தை விட்டு பூலோகம் வந்தார். அப்படி அவர் வந்து சேர்ந்த இடம் ஒரு நந்தவனம். அந்த நந்தவனம், 12 ஆண்டுகளாக மழை இன்றி வறண்டு காணப்பட்டது. பார்வதி தேவி வந்ததும் மழை பெய்து, அந்த நந்தவனம் புத்துயிர் பெற்றது. பல அரிய பூக்கள் பூத்தன. அதன் வாசத்தை நுகழ்ந்து அங்கு வந்த வால்மீகி முனிவர், அம்பிகையை தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார்.

உயர்ந்த விரதம்

அப்போது பார்வதி தேவி, "முனிவரே.. நான் மீண்டும் ஈசனுடன் சேருவதற்கு, அனைத்து விரதங்களையும் விட மேலான விரதம் ஒன்று வேண்டும். அப்படியொரு விரதம் இருக்கிறதா?" என்று கேட்டார்.

அதற்கு வால்மீகி முனிவர், "தாயே.. இந்த பூலோகத்தில் ஒருவரும் அறியாத ஒரு விரதமுண்டு. அந்த விரதத்திற்கு 'கேதாரீஸ்வரர் நோன்பு' என்று பெயர். அந்த விரதத்தினை அனுஷ்டித்தால் நீங்கள் நினைத்தது நடக்கும்" என்றார்.

அதன்படி அம்பிகை, அந்த விரதத்தை முறை தவறாமல் கடைப்பிடித்தாள் பார்வதி தேவி. இதையடுத்து விரதத்தின் 21-ம் நாள் அன்று, தேவ கணங்கள் சூழ அம்பிகைக்கு சிவபெருமான் காட்சி அளித்தார். அதோடு தனது இட பாகத்தினை அம்பிகைக்கு அளித்து, அர்த்தநாரீஸ்வரராக கயிலாயம் சென்றார். அம்பிகையே விரதம் இருந்த காரணத்தால், இது 'கேதார கவுரி விரதம்' என்று அழைக்கப்படுகிறது.

விரதம் இருப்பது எப்படி?

கேதார கவுரி விரதம் பொதுவாக, 21 நாள் அனுசரிக்க வேண்டிய விரதம். புரட்டாசி மாதம் சுக்லபட்ச தசமி திதியில் தொடங்கி, ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் அமாவாசை வரைக்கும் தொடரும் விரதம் இது. தினமும் காலை எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்து, சிவ பூஜை செய்ய வேண்டும். நோன்பின் முதல் நாள் அன்று 21 நூல் கொண்டு 21 முடிச்சுகளால் கலசத்தினை சுற்றி அமைப்பர். இக்கலசமே சிவ-பார்வதியாக வழிபடப்படுகின்றது.

இந்த விரதம் இருப்பவர்கள், தினமும் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் நைவேத்தியம் வைத்து அதனையே பிரசாதமாக உண்பார்கள். 21-ம் நாள் அன்று 21 அதிரசம், 21 வாழைப்பழம், 21 மஞ்சள், 21 வெற்றிலை, 21 கொட்டை பாக்கு, தேங்காய், சந்தனம், பூக்கள் வைத்து வழிபடுவர். 21 வகை காய்கறிகள் கொண்டு உணவினை சமைத்து உற்றார், சுற்றார் சூழ சாப்பிட்டு விரதத்தினை முடிப்பர்.

பெண்களுக்கு சிறந்த விரதம்

இது பெண்களுக்கு மிகச் சிறப்பான விரத பூஜையாகும். இப்பூஜை அவரவர் குடும்ப வழக்கப்படி சற்று மாறுபடும். அவரவர் பெரியோர்களிடம் கேட்டு அறிந்து அவர்கள் மூலம் எடுத்துச் செய்வது நல்லது. ஐப்பசி அமாவாசை அன்று செய்யும் பூஜையில் முடிந்தால் தங்கம் (நகை) சாத்தி, பட்டு வஸ்திரம் சுற்றி பூவால் அலங்கரித்து சந்தன குங்குமம் இட வேண்டும். விளக்கேற்றி வைக்க வேண்டும். மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்து அருகம்புல், பூ சுற்றி, மஞ்சள் குங்குமம் இட்டு விநாயகரை அர்ச்சிக்க வேண்டும். அதோடு இறைவனின் 16 நாமங்களைச் சொல்லி தூப, தீப ஆராதனை செய்து நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். பின்னர் அம்மி குழவியை நன்கு சுத்தம் செய்து பலவித அலங்காரங்களை அதற்கும் செய்து வில்வம், தும்பை போன்ற விசேஷ இலை, பூக்களையும் சேர்த்து சிவ நாமம் செய்து பூஜிக்க வேண்டும். தூப, தீப ஆராதனைகள், நைவேத்தியம் வைத்து அட்சதை போட்டு வணங்கி, வீட்டில் உள்ள பெரியவர்கள் மூலம் நோன்பு கயிறு கட்டிக் கொள்ள வேண்டும். ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் நோன்பு கயிறு கட்டிக் கொள்ள வேண்டும். வருவோருக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், 21-வது நாள் ஈஸ்வரன் காட்சி அளித்து வேண்டிய வரம் அளிப்பார் என்பது ஐதீகம்.

கேதார கவுரி விரதம் 21 நாள் அனுசரிக்க வேண்டிய விரதமாக இருந்தாலும், தங்களுடைய உடல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு குறைந்த நாட்கள் விரதம் இருந்து கொள்ளலாம். நிறைவு செய்யும் நாளுக்கு முன்பாக இருந்து எத்தனை நாட்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அத்தனை நாட்கள் இருக்கலாம். தற்போது பெரும்பாலான பக்தர்கள் ஒரு நாள் மட்டுமே விரதம் கடைப்பிடிக்கின்றனர். அதாவது, கேதார கவுரி விரதம் நிறைவு செய்யும் நாளான அமாவாசை அன்று மட்டும் விரதம் இருந்து சிவ-பார்வதியை வழிபடுவார்கள். அவ்வகையில் இந்த ஆண்டு ஒரு நாள் மட்டும் விரதம் இருப்பவர்கள், நவம்பர் 1-ம் தேதி (1-11-2024) விரதம் மேற்கொள்ளலாம்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினமான 31-10-2024 அன்று மாலையில் தொடங்கி மறுநாள் மாலை வரை அமாவாசை திதி உள்ளது. எனவே, பெரும்பாலான மக்கள் தீபாவளி அன்று (31-10-2024) அன்று விரதம் மேற்கொள்வார்கள்.

ஒரு நாள் மட்டுமே விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் பூஜை முடியும் வரை எதுவும் சாப்பிட மாட்டார்கள். திரவ உணவுகள் கூட எடுத்துக்கொள்ள மாட்டார்கள். தொடர் விரதம் இருப்பவர்கள் ஒருவேளை உணவு மட்டும் எடுத்துக்கொண்டு மற்ற இரண்டு வேளையும் திரவ உணவுகளை உட்கொள்வது வழக்கம். உடல் சூழ்நிலை நன்றாக இருக்கும் பட்சத்தில் மூன்று வேளையும் திரவ உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டும் இருப்பார்கள். குறிப்பாக, இந்த விரதம் மேற்கொள்ளும்போது அசைவத்தை தவிர்க்க வேண்டும்.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next