‘இது அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும்’ - வெற்றி உரையில் டொனால்ட் டிரம்ப் பெருமிதம்!
“வரலாற்றில் இதுவரை இல்லாத வெற்றியை மக்கள் கொடுத்துள்ளனர். இது அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும்.” என்று இரண்டாவது முறையாக அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார்.
அமெரிக்க நாட்டின் அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் புளோரிடாவில் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் அவர் உரையாற்றினார். அப்போது பேசுகையில், “வரலாற்றில் இதுவரை இல்லாத வெற்றியை மக்கள் கொடுத்துள்ளனர். இது அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும். நாங்கள் அமெரிக்க மக்களை நிச்சயம் பெருமை அடையச் செய்வோம். அந்த அளவுக்கு எங்களின் பணிகளும், செயல்பாடுகளும் இருக்கும். துணை அதிபராகத் தேர்வாகி இருக்கும் ஜேம்ஸ் டேவிட் வான்ஸுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். துணை அதிபர் பொறுப்புக்கு சரியான தேர்வு அவர்.
இந்தத் தேர்தலில் நமது வெற்றிக்காகப் பணியாற்றிய எலான் மஸ்கிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயம் அவர் ஒரு ஜீனியஸ். எலான் மஸ்க்கை நாம் பாதுகாக்க வேண்டும். நமது பொறுப்பு அது. அவரைப் போல நமது வெற்றிக்காகத் தேர்தலில் பணியாற்றிய அனைவருக்கும் இந்த நேரத்தில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
யாரும் இதுவரை செய்யாததை நாங்கள் செய்வோம். ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் வரிகளைக் குறைத்து மக்களின் சுமைகளைக் குறைப்போம். நாட்டின் எல்லைகளை வலுப்படுத்துவதோடு, ராணுவத்துக்கும் பலம் சேர்ப்போம். மக்களுக்கு ஜனநாயக உரிமையையும், சுதந்திரத்தையும் அளிப்போம். அனைவரும் ஒன்றாக இணைந்து இந்த இலக்கை அடைவோம். அமெரிக்காவின் எதிர்காலத்தை வளமாக்குவோம்.
உலகின் மிக முக்கியமான பணி இது. அதனால் தான் இறைவன் எனது உயிரைக் காப்பாற்றினார் என நினைக்கிறேன். இந்த நேரத்தில், உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்” என டிரம்ப் வெற்றி உரையில் கூறினார்.
டிரம்ப் வெற்றி:
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற 270 எலக்டோரல் வாக்குகளுக்கு அதிகமாகப் பெற வேண்டும். அந்நாட்டுத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இதுவரை வெளியான முடிவுகளில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் 267 எலக்டோரல் வாக்குகளைப் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 224 எலக்டோரல் வாக்குகள் மட்டுமே பெற்றுப் பின்தங்கியுள்ளார். வாக்குகள் எண்ணப்பட்டு வரும் ஐந்து மாநிலங்களிலும் டிரம்ப் முன்னிலையில் உள்ளதால் அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.