நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கிறீர்களா? - எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்... தவிர்ப்பது எப்படி?
நாம் பணிபுரியும் அலுவலகங்களில் நம்மில் பெரும்பாலோர் எந்நேரமும் அமர்ந்திருக்கும் சூழல் உள்ளது. இதற்கிடையில் தற்போது வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் கலாச்சாரம் பெருகி வரும் நிலையில், நாற்காலி அல்லது சோபாவில் உட்கார்ந்து வேலை பார்த்தபடியே, குறைந்த உடல் இயக்கத்துடன் நம் நாட்களைக் செலவழித்து வருகிறோம். ஆனால் நாம் சற்றும் எதிர்பார்க்காத பல பிரச்சனைகள் இங்குதான் உள்ளது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது பல நோய்களை வரவழைத்து, மெதுவாக நம்மைக் கொல்லும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது உடல் பருமன், தசை பலவீனம், முதுகெலும்பு அழுத்தம், மோசமான இரத்த சர்க்கரை ஒழுங்குமுறை மற்றும் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் குறைவதற்கு வழிவகுக்கும். இது முதுகு, இடுப்பு, மற்றும் இதயத்திற்கும் ஆரோக்கியமற்றதாகும்.
உட்கார்ந்திருப்பது முதுமையை துரிதப்படுத்தும்:
பிப்ரவரி 2024-ல் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், ஒன்பதரை மணி நேரத்திற்கும் குறைவாக ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பவர்களை விட, ஒரு நாளில் பதினொரு மணி நேரத்திற்கும் மேலாக உட்கார்ந்திருக்கும் வயதான பெண்களுக்கு அகால மரணம் ஏற்படும் அபாயம் 57% அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்கர்களுக்கான உடல் செயல்பாடு வழிகாட்டுதல்களின்படி, பெரியவர்கள் 150 நிமிடங்களுக்குக் குறையாமல், மிதமானது முதல் தீவிர உடல் பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும் ஒரு வாரத்தில் இரண்டு நாட்கள் தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளை பெரியவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் இது அறிவுறுத்துகிறது.
நாம் செய்யும் 30 நிமிட மதிப்புள்ள உடற்பயிற்சியால், ஒரு நாளில் மீதமுள்ள 23 மணி நேரம் 30 நிமிடங்களில் நாம் செய்யும் செயல்களிலிருந்து உடலை சமநிலைப்படுத்த முடியாது என்று ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் உயிரியல் மற்றும் உயிர்வேதியியல் பேராசிரியர் மார்க் ஹாமில்டன் கூறுகிறார். மனித உடல்கள் நாள் முழுவதும் நகரும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன; வெறுமனே சும்மா உட்கார்வதற்காக இல்லை என்றும் அவர் கூறுகிறார்.
இதுபோன்ற சூழ்நிலையிலிருந்து வெளியேறுவதற்கான சில டிப்ஸ்:
எழுந்து நடமாடுவதற்கு நேரத்தை ஒதுக்குங்கள் : ஒரு நாளில் உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். இது நடைபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுவது போன்ற எளிமையான பயிற்சியாக இருக்கலாம். நாம் இதை இன்னும் தீவிரப்படுத்த விரும்பினால், ட்ரெக்கிங் செல்லலாம்.
நிற்கும் மேசை : நாள் முழுவதும் நாற்காலி அல்லது சோபாவில் உட்காருவதற்குப் பதிலாக, வேலை செய்யும் இடத்தில் நிற்கும் மேசையை வைத்துக் கொள்ளலாம். நிற்கும் மேசை, நாம் அதிகமாக நகர்வதையும், அதிக ஆற்றலை எரிப்பதையும் உறுதி செய்கிறது.
நகர்ந்தபடி இருத்தல் : நாம் வேலை செய்யும் போது அல்லது கூட்டத்தில் பேசும்போது கூட, சுற்றி நடப்பது அல்லது கால்களை அசைப்பது அல்லது கால்களை வளைப்பது அறிவுறுத்தப்படுகிறது. ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் நமது உடல் நிலையை மாற்ற நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். கால் மற்றும் முதுகுத்தண்டின் நிலைகளை சரிசெய்வது அல்லது ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை உட்கார்ந்தபடியும் நின்று கொண்டும் வேலை செய்வதும் நம்மை ஆரோக்கியமாக இருக்க உதவும்.