2036ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள்?... சர்வதேச கமிட்டிக்கு பறந்த கடிதம்!
இந்தியாவில் 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அண்மையில் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன. 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும், 2032 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலும் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் அண்மையில் நடந்த கூட்டத்தில் 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா நடத்த விருப்பம் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் இந்திய ஒலிம்பிக் சங்கம், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் வருங்கால போட்டி நடத்தும் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை அதிகாரபூர்வமாக அனுப்பியுள்ளது.
கடந்த 1 ஆம் தேதி இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய விளையாட்டு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.