Kasthuri | தெலுங்கர்கள் குறித்து சர்ச்சை பேச்சு... நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு!
தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த சர்ச்சையில் சிக்கிய நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிராமணர்களுக்கு பாதுகாப்பு கோரி 2 நாட்களுக்கு முன்பு சென்னை எழும்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறி கஸ்தூரி மீது சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி புகார் அளித்தார்.
பேச்சு சர்ச்சையானதை அடுத்து தெலுங்கர்கள் குறித்த பேச்சை திரும்பப் பெறுவதாக அறிவித்த கஸ்தூரி, மன்னிப்பும் கேட்டார். ‘‘தெலுங்கர்களைப் புண்படுத்தும் எண்ணம் இல்லை என்றும், கவனக்குறைவாக வந்த வார்த்தைகள் யாரையும் புண்படுத்தினால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’’ என்றும் கூறினார்.
இதற்கிடையே, தெலுங்கர்களை “அந்தப்புரத்து சேவகர்கள்” என பேசிய நடிகை கஸ்தூரி மீது தெலுங்கு சம்மேளனம் கொடுத்த புகாரில் எழும்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.
மதம், இனம், மொழி குறித்து இருவேறு மக்களிடையே பிரச்னை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ள எழும்பூர் போலீஸார், புகார் தொடர்பாக விசாரணை நடத்தத் தொடங்கியுள்ளனர்.