"வசவாளர்கள் வாழ்க" - விஜய்யை மறைமுகமாக சாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
புதிதாக கட்சி தொடங்கியவர்கள் திமுக அழிய வேண்டும் என்று நினைப்பதாக தவெக தலைவர் விஜய் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் அனிதா அகாடமி மூலம் பயின்ற 107 மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் மடிக்கணினிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டினார். அப்போது பேசிய முதலமைச்சர், ஒடுக்கப்பட்டோரின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த கோரிகைக்கும் என்றாவது ஒருநாள் மத்திய அரசு பணிந்து போகும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
மேலும், மூன்றரை ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம் என்றார். இதை தொடர்ந்து, புதிதாக கட்சி தொடங்கியவர்கள் திமுக அழிய வேண்டும் என்று நினைப்பதாக தவெக தலைவர் விஜய் மீது மறைமுகமாக குற்றம்சாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வசவாளர்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்தார்.