ஊர் திரும்பும் மக்கள்! அலைமோதும் கூட்டம்!
தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் விடுமுறை முடிந்து வழக்கமான பணிகளுக்கு திரும்ப தொடங்கியதால், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.
கோவையில் வெளியூர்களில் இருந்து கோவைக்கு வருவோரும், கோவையில் இருந்து வெளியூர்களுக்கு செல்வோரும் அதிகளவில் ரயிலில் பயணம் மேற்கொண்டனர். இதனால், ரயில் நிலையம் முழுவதும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பியது.
இதேபோல், சேலம் ரயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. தீபாவளி விடுமுறை முடிந்து ஊர் திரும்பியவர்களால், நெல்லை ரயில் நிலையத்திலும் இரண்டாவது நாளாக கூட்டம் அலைமோதியது. சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கிய போதிலும், ‘‘அந்தியோதயா’’ முன்பதிவு இல்லாத ரயிலில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
திருப்பூரிலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலரும் ரயில்கள் மூலம் பணிக்கு திரும்பிய நிலையில், ரயில் நிலையம் முழுவதும் பயணிகளால் நிரம்பியது.
தீபாவளியை கொண்டாட திருச்சிக்கு வந்தவர்களும், திருச்சியில் இருந்து புறப்பட்டவர்களும் அதிகளவில் பேருந்து பயணத்தை தேர்வு செய்ததால், மத்திய பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.
பயணிகள் வசதிக்காக மன்னார்புரம், டிவிஎஸ் டோல்கேட், கண்டோன்மென்ட் உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.