பாஜகவுடன் அதிமுக கூட்டணி? எடப்பாடியின் பரபரப்பு பதில்!

chief-minister-mk-stalin-did-not-even-have-the-power-to-open-the-cattle-park-because-it-was-built-during-the-admk-regime
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-11-10 21:16:00

விருதுநகர் மாவட்டம், பட்டம்புதூரில் நடைபெற்ற அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய முதலமைச்சர், ஆட்சி பொறுப்பில் இருந்தபோது மக்களைப் பற்றி கவலைப்படாத எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தற்போது கலைஞர் பெயரில் பயன்படாத திட்டங்களை செயல்படுத்துவதாகப் பொய் பரப்புரை செய்து வருகிறார் என பேசியிருந்தார்.

இந்நிலையில், இன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் எதுவுமே செய்யவில்லை என முதல்வர் பேசியிருக்கிறார். 2011ல் இருந்து 2021ம் ஆண்டு வரை மொத்தம் 10 ஆண்டுகள் சிறந்த ஆட்சியை அதிமுக கொடுத்திருக்கிறது.

ஜெயலலிதா தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்று அவர் ஆட்சியில் இருந்தவரை பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தார். அதன் மூலம், அதிக அளவில் மக்கள் நன்மை பெற்றுள்ளனர். அவர் மறைந்து நான் முதல்வராக பொறுப்பேற்று சுமார் 4 வருடம் 2 மாதம் காலம், அதிமுக சிறப்பான ஆட்சியை நாட்டு மக்களுக்கு வழங்கியது.

வேண்டும் என்றே திட்டமிட்டு முதலமைச்சர் ஸ்டாலின், என்னை பற்றி விமர்சனம் செய்வது கேலிகூத்தாக பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா அரசு இருக்கும்போது தான் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டுவந்து சாதனை படைத்தோம். ஆறு சட்டக் கல்லூரிகள், பல கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை கொடுத்தோம்.

சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியில் இந்தியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா கட்டி முடிக்கப்பட்டு இரண்டரை ஆண்டு காலமாகிறது. இந்த இரண்டரை திமுக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட அந்த கால்நடை பூங்காவை திறக்கக்கூட திராணியற்ற முதலமைச்சர் ஸ்டாலின். அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அந்த கால்நடை பூங்கா இன்று வரை திறக்கவில்லை. முழுக்க முழுக்க மாநில நிதியில் இருந்து கட்டப்பட்டது அது.

கொரோனா காலத்தில் ஒவ்வொரு மாநில முதல்வர்களுடனும் பிரதமர் மோடி பேசியபோது, தமிழ்நாடு தான் கொரோனாவை தடுப்பதில் முதல் மாநிலம் அதனை பின்பற்றுங்கள் என பாராட்டியது அதிமுக ஆட்சியை. பல்வேறு துறைகளில் தேசிய அளவில் விருதுகளை பெற்று முதல் மாநிலமாக தமிழ்நாடு அதிமுக ஆட்சியில் இருந்தது.

முதலமைச்சருக்கு குடும்பத்தை பற்றி சிந்திப்பதற்கே நேரமிருக்கிறது. மக்களை பற்றி சிந்திக்க நேரமில்லை. நாட்டு மக்களை பற்றி கவலைப்படாத முதல்வர் ஸ்டாலின் மட்டும் தான்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் பாஜக இல்லாத கூட்டணிக்கு அதிமுக தயாரா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “இன்னும் ஒன்றரை ஆண்டு தேர்தலுக்கு இருக்கிறது. தேர்தல் நெருங்கும்போதுதான் யார் யாருடன் கூட்டணி என்பது தெரியும். அதிமுகவைப் பொறுத்தவரையில், எங்கள் தலைமையை ஏற்று, ஒத்த கருத்துள்ள கட்சிகள் எல்லாம் இணைக்கப்பட்டு மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே எங்களின் நோக்கம்” என்று தெரிவித்தார்.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next