Delhi Ganesh: டெல்லி கணேஷ் எனும் தன்னிகரற்ற பன்முகக் கலைஞன்... ஓர் சிறப்பு பார்வை!
தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு முத்திரையை பதித்த நடிகர் டெல்லி கணேஷ் வயது முதிர்வு காரணமாக சென்னையில் காலமானார். அவரின் வாழ்க்கைப் பயணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்..
தனித்துவமான நடிப்பு… கதாபாத்திரமாகவே மாறி விடும் நேர்த்தி… என்ன வேடம் என்றாலும் பொருந்திப் போகும் தன்மை… இதுதான் டெல்லி கணேஷின் அடையாளம்.
திருநெல்வேலி மாவட்டம் வளநாடு கிராமத்தில் 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பிறந்த டெல்லி கணேஷ் ஆரம்ப காலத்தில் டி.வி.எஸ். நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அதன்பின் தேர்வெழுதி விமானப்படையில் இணைந்து பத்தாண்டு காலம் பணியாற்றினார். அப்போது, வீரர்கள் முகாம்களில் நாடகம் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த நிலையில், அந்த நாடகங்களில் டெல்லி கணேஷ் நடித்து வந்தார். அதன் பிறகு தமிழ்நாடு திரும்பிய டெல்லி கணேஷ், 1976 ஆம் ஆண்டு ‘பட்டின பிரவேசம்’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். கணேஷாக இருந்த அவர் பெயரை டெல்லி கணேஷ் என மாற்றியவர் அந்த படத்தின் இயக்குனர் கே.பாலச்சந்தர்.
இந்த கதாபாத்திரத்தில்தான் நடிப்பேன் என்று இல்லாமல், தனக்கு வழங்கப்பட்ட, அத்தனை கதாபாத்திரங்களிலும் நடித்து பன்முகக் கலைஞராக வலம் வந்தவர் டெல்லி கணேஷ்.
குணச்சித்திர வேடங்களில் மட்டுமல்ல 1981ஆம் ஆண்டு என்.ஏ.கஜா இயக்கிய ‘எங்கம்மா மகாராணி’ படத்தில் நாயகனாகவும் நடித்துள்ளார்.
கமல்ஹாசனை கொலை செய்யும் காட்சியிலும், கமல்ஹாசனால் கொல்லப்படும் காட்சியிலும் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் வில்லனாக மிரட்டியிருப்பார்.
‘பசி’, ‘சிந்து பைரவி’, ‘நாயகன்’ போன்ற திரைப்படங்கள் அவரின் நடிப்பில் புதிய பரிணாமங்களை கொண்டு வந்தவை.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ திரைப்படத்தில் நாயகன் விமலின் தந்தையாக நடித்திருப்பார். அதில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பில் விமல் உடன் இறுதியாக பேசும் காட்சியில், பலரையும் கண்ணீர் விட வைத்தார்.
‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘அவ்வை சண்முகி’, ‘தெனாலி’ உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை நடிப்பில் தெறிக்கவிட்டவர்.
டெல்லி கணேஷ் 80 வயதை நெருங்கி இருந்தாலும் ‘இரும்புத்திரை’, ‘அரண்மனை-4’, ‘ரத்னம்’, ‘இந்தியன் 2’ என அடுத்தடுத்த படங்களில் நடித்துக் கொண்டுதான் இருந்தார்.
திரைப்படங்கள் மட்டுமில்லாமல் தொலைக்காட்சி தொடர்கள், இணைய தொடர்கள் என அனைத்திலும் டெல்லி கணேஷ் நடித்து வந்தார்.
500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் டெல்லி கணேஷிற்கு 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது கொடுத்து அங்கீகரித்தது. ‘பசி’ திரைப்படத்திற்கு சிறந்த நடிகருக்கான மாநில விருதையும் டெல்லி கணேஷ் வென்றுள்ளார்.
சுமார் 48 ஆண்டுகள் தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற பன்முகக் கலைஞனாக வலம் வந்த டெல்லி கணேஷ், கடைசி காலம் வரை வெள்ளித்திரையை அலங்கரித்துக் கொண்டிருந்தார்.