டிஜிட்டல் பயிர் சர்வேயில் மாணவர்களை ஈடுபடுத்துவதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

engaging-students-in-digital-crop-surveys-condemned-by-anbumani-ramadoss
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-11-10 23:12:00

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முழுவதும் வேளாண் நிலம், பயிர் குறித்த அனைத்து விவரங்களையும் டிஜிட்டல்மயமாக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டு வரும் டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் வருவாய்த்துறை அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கு பதிலாக வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் இயலாமையை மறைப்பதற்காக மாணவ, மாணவியரின் பாதுகாப்பை பலி கொடுப்பது கண்டிக்கத்தக்கது.

இந்தியா முழுவதும் வேளாண் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் பணிகளை ஒருங்கிணைப்பதற்காகவும், நிலத்தின் தன்மை, அளவு, பயிர் வகைகள், விவசாயிகள் வருமானம், கடன், காப்பீடு உள்ளிட்ட அனைத்து தரவுகளையும் டிஜிட்டல் மயமாக்கும் நோக்கத்துடன் நிலங்களை டிஜிட்டல் முறையில் சர்வே செய்வதற்கு மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. இதற்காக அக்ரிஸ்டாக் என்ற அறக்கட்டளையை உருவாக்கி உள்ள மத்திய அரசு அதன் வாயிலாக இந்தப் பணிகளை மேற்கொள்ள மாநில அரசுகளை கோரியுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வருவாய்த்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் தனியார் நிறுவனங்களைக் கொண்டு ஒப்பந்த அடிப்படையில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் வேளாண்மைக் கல்லூரி மாணவர்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 6-ம் தேதி தமிழகத்தின் 24 மாவட்டங்களில் உள்ள 48 கிராமங்களில் சோதனை அடிப்படையில் டிஜிட்டல் பயிர் சர்வே நடத்தப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் 22 நாட்கள் நீடிக்கும் முதன்மை சர்வேயை தொடங்கி நவம்பர் மாத இறுதிக்குள் முடிக்க தமிழக அரசின் வேளாண்துறை ஆணையிட்டிருக்கிறது.

நிலத்தின் தன்மை, வளம், உரிமையாளர் விவரங்கள், கடன், காப்பீடு உள்ளிட்ட விவரங்களை டிஜிட்டல் மயமாக்குவது பயனுள்ள நடவடிக்கைகள் என்பதில் ஐயமில்லை. ஆனால், இதை வேளாண்மை கல்லூரி மாணவர்களைக் கொண்டு மேற்கொள்வது தவறானது; இதை ஒருபோதும் அரசு அனுமதிக்கக் கூடாது. மொத்தம் 61 கோடி ஏக்கர் பரப்பளவிலான இப்பணிகளை மாணவர்களைக் கொண்டு முடிப்பது எளிதல்ல. டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளை மாணவர்களைக் கொண்டு மேற்கொள்வது இரு காரணங்களுக்காக தவிர்க்கப்பட வேண்டியதாகும். முதலில் மாணவர்களின் பாதுகாப்பு.

செப்பனிடப்படாத பகுதிகளில் பணியாற்றும் மாணவ, மாணவிகளை பாம்பு, தேள் போன்ற உயிரினங்கள் கடித்து அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும். பாதுகாப்பற்ற தனித்த பகுதிகளில் பணியாற்றும் போது மாணவ, மாணவியருக்கு சமூகவிரோதிகளால் பாதிப்பு ஏற்படலாம். இதற்கெல்லாம் அரசு பொறுப்பேற்குமா?.

டிஜிட்டல் பயிர் சர்வே திட்டத்திற்கு ரூ.2817 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு மட்டும் ரூ.1940 கோடியை வழங்குகிறது. இதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்படும் நிதியைக் கொண்டு தனியார் நிறுவனங்கள் மூலமாகவோ, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதன் மூலமாகவே இப்பணியை தமிழகத்தில் எளிதாக செய்ய முடியும். அதை விடுத்து மாணவர்கள் மூலம் இந்தப் பணியை செலவின்றி செய்யத் துடிக்கும் அரசு, அதற்காக நிதியை என்ன செய்யப்போகிறது?.

கல்வி கற்க வேண்டிய மாணவ, மாணவியரை இத்தகைய கடுமையான பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது. மத்திய அரசு வழங்கும் நிதியைக் கொண்டு டிஜிட்டல் பயிர் சர்வே பணியை வேறு அமைப்புகள் மூலம் தமிழக அரசு செய்ய வேண்டும். இந்தப் பணிகளில் இருந்து மாணவர்களை அரசு விடுவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next