“நம் ஒற்றுமை சிதைக்க காங்கிரஸ் முயற்சி” - பிரதமர் மோடி
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள மொத்தம் 81 தொகுதிகளுக்கு நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில், காங்கிரஸ் மற்றும் ஆளும் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகியவை ஒரு கூட்டணியிலும் இதனை எதிர்த்து பாஜக தலைமையிலான கூட்டணியும் போட்டியிடுகின்றன.
ஆளும் கட்சி மீதான் அதிருப்தி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் முக்கிய தலைவரான சம்பாய் சோரன் விலகி பாஜகவில் இணைந்ததன் பின்னணியில் அந்த மாநிலத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிக்க இரு கூட்டணியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. அந்தவகையில், ஜார்க்கண்ட் மாநிலம், கும்லா தொகுதியில் இன்று பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், “ஆதிவாசி, ஓ.பி.சி. மற்றும் தலித்கள் உள்ளிட்டவர்கள் ஒற்றுமையாக இருப்பதால், நீங்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் காங்கிரஸ் மொத்தமாக தோல்வியை சந்திக்கும். அதன் காரணமாகவே, எஸ்.சி., ஆதிவாசி மற்றும் ஓ.பி.சி. சமூகங்களுக்கு இடையான நமது ஒற்றுமையை காங்கிரஸ் தாக்குகிறது.
காங்கிரஸ் உங்களின் இடஒதுக்கீட்டை நீக்குவதற்கு முயற்சிக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே ஓ.பி.சி.யை காங்கிரஸ் எதிர்த்துவருகிறது. ஓ.பி.சி.க்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என 1955ல் காக்கா சாகேப் காலேல்கர் தெரிவித்தார். ஆனால், நேரு அதனை அப்படியே கிடப்பில் போட்டார். அதேபோல், 1980ல் மண்டல் கமிஷன் ஓ.பி.சி. இடஒதுக்கீட்டிற்கு பரிந்துரை செய்தது. அதனை இந்திரா காந்தி கிடப்பில் போட்டார்.
எப்போது எனது அரசு அதிகாரத்திற்கு வந்ததோ, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு அனைத்து மத்திய நிறுவனங்களிலும் 27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியது” என்று பேசினார்.