பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய குடிமக்களுக்கான விருது வழங்கி கவுரவம்
குவைத்,
பிரதமர் மோடி குவைத்திற்கு 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நேற்று புறப்பட்டு சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவருடைய இந்த 2 நாள் பயணத்தில், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களை சந்தித்து உரையாடுவதுடன், இந்தியா மற்றும் குவைத் இடையே பல்வேறு பிரிவுகளில் நட்புறவை வலுப்படுத்தும் வகையில், குவைத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதேபோன்று, குவைத்தில், முன்னாள் ஐ.எப்.எஸ். அதிகாரியான 101 வயதுடைய மங்கள் செயின் ஹண்டாவை, பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேச இருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில், குவைத் சென்றடைந்த பிரதமர் மோடியை, அந்நாட்டு விமான நிலையத்தில் துணை பிரதமர் மற்றும் பாதுகாப்பு மந்திரியான ஷேக் பகத் யூசப் சவுத் அல்-சபா மற்றும் பலர் வரவேற்றனர்.
இதன்பின்னர், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களை சந்தித்து அவர் பேசினார். அப்போது அவர்கள் கைகளில் இந்திய தேசிய கொடியுடன் பிரதமரை வரவேற்றனர். அவர்கள் பிரதமருக்கு கரம் கூப்பி வணக்கம் தெரிவித்தனர். இந்த பயணத்தில், ராணுவம் மற்றும் பாதுகாப்பில் ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு, குவைத் நாட்டின் உயரிய குடிமக்களுக்கான விருது வழங்கப்பட்டது. குவைத்தின் அமீர், ஷேக் மெஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல் சபா, பிரதமர் மோடிக்கு விருது வழங்கி கவுரவம் அளித்துள்ளார்.
தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர் என்ற இந்த விருது நாடுகளின் தலைவர்கள், வெளிநாட்டு ஆட்சியாளர்கள் மற்றும் வெளிநாட்டு அரச குடும்பத்தினர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. இதன்பின்னர், ஷேக் மெஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல் சபாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் பிரதமர் மோடி ஈடுபட்டார்.
இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், குவைத்தின் பாயன் அரண்மனையில் குவைத்தின் அமீர், ஷேக் மெஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல் சபாவை பிரதமர் மோடி சந்தித்து உள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை முன்னெடுத்து செல்லப்பட்டு உள்ளது. இந்தியா மற்றும் குவைத் இடையேயான உறவுகள், மூலோபாய நட்புறவுக்கு உயர்த்தப்பட்டு உள்ளது.
இரு நாட்டு இருதரப்பு உறவுகளை புதிய உச்சத்திற்கு எடுத்து செல்வதற்காக அதுபற்றி அறிந்து கொள்வதற்கான வழிகளைப்பற்றிய ஆலோசனைகளில் கவனம் செலுத்தப்பட்டன. குவைத்தில் இந்திய சமூகத்தினர் நலமுடன் இருப்பதற்காக, அமீருக்கு தன்னுடைய நன்றியை பிரதமர் மோடி தெரிவித்து கொண்டார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 1981-ம் ஆண்டு கடைசியாக மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குவைத்துக்கு பயணம் மேற்கொண்டார். அவருக்கு அடுத்து பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.