வரலாற்றில் 8 லட்சம் மக்கள் மரணித்த மிகக் கொடிய நாள் எது தெரியுமா.. என்ன நடந்தது?
மனித வரலாற்றில் 8 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மரணித்த மிகக்கொடிய நாள் எதுவென தெரியுமா.. அவ்வளவு மக்கள் உயிரிழக்க காரணமான பேரழிவு என்ன.. அது எப்படி நடந்தது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
கொடிய நோய்கள் பரவுதல், மாசுபாடு மற்றும் அணு ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் மனிதர்கள் ஒருவரையொருவர் நாசம் செய்து வருகின்றனர். மனித வரலாற்றில் மிகவும் கொடிய நாள் இயற்கை பேரிடரால் ஏற்பட்டது என்று பலர் நம்புகிறார்கள், இருப்பினும் இதை உறுதிப்படுத்துவது கடினம். ஒரு காலத்தில் ‘சீன நாகரிகத்தின் தொட்டில்’ என்று கருதப்பட்ட ஷான்சி மாகாணம், ஜனவரி 23, 1556-ம் ஆண்டு காலை சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் தாக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கம் ஒரு சில வினாடிகள் மட்டுமே நீடித்தாலும், இதனால் 1 லட்சம் பேர் நேரடியாக கொல்லப்பட்டதாகவும், நிலச்சரிவுகள், மண்ணுக்குள் மூழ்குதல், தீ, இடம்பெயர்வு மற்றும் பஞ்சத்தின் விளைவாக கூடுதலாக 8.30 லட்சம் பேர் இறந்ததாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போர் போன்ற பெரும் பேரழிவுகள், தொற்றுநோய்கள், பஞ்சம் மற்றும் வெள்ளம் போன்றவற்றின் ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கையை விட இது மிக அதிகமாக உள்ளது.
மிங் வம்சத்தின் ஜியாஜிங் பேரரசரின் ஆட்சியின் போது ஏற்பட்ட ஜியாஜிங் பூகம்பம் என்றும் அழைக்கப்படும் ஷாங்சி பூகம்பம், மிகவும் மோசமான கொடிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. வரலாற்றில் மிக மோசமான நிலநடுக்கமாகவும் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் 8.0 மற்றும் 8.3 ரிக்டர் அளவுக்கு இடையில் இருந்ததாக நம்பப்படுகிறது. இதற்கு முன்னும் பின்னும் பல வலுவான பூகம்பங்கள் ஏற்பட்டிருந்தாலும், நிலநடுக்கம் காரணமாக சுற்றியுள்ள நகரங்களான ஹூயாசியன், வெயினியன் மற்றும் ஹூயாயின் போன்ற பகுதிகள், அதன் புவியியல் மற்றும் நகர்ப்புற வடிவமைப்பு காரணமாக கடுமையான சேதத்தை சந்தித்தன.
இந்த நிலநடுக்கம் ஏன் இவ்வளவு கொடியதாக இருந்தது?
வட-மத்திய சீனாவில் உள்ள லோஸ் பீடபூமியைக் கடக்கும் வெய் நதி பள்ளத்தாக்கு, புவியியல் ரீதியாக அசாதாரணமான இடமாகும். இந்த பீடபூமியானது, பாலைவனத்தில் இருந்து அரிக்கப்பட்ட காற்றினால் வீசப்படும் தூசியின் திரட்சியால் உருவான வண்டல் மண்ணை கொண்டுள்ளது. மேலும் இது கோபி பாலைவனத்தின் கீழே உள்ளது.
அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, குகை போலிருக்கும் பல வீடுகள் இடிந்து விழுந்தன. அதனுள்ளே மக்கள் சிக்கிக்கொண்டனர். மேலும் பீடபூமி முழுவதும் பரவிய நிலச்சரிவு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், நகரங்களில் உள்ள பல கட்டிடங்கள் அந்த நேரத்தில் கனமான கல்லால் கட்டப்பட்டிருந்தன. இதுவும் அதிக இறப்பிற்கு காரணமாக இருந்தது.
1998 -ல் நடத்தப்பட்ட ஒரு புவியியல் ஆய்வின்படி, 1556 நிலநடுக்கத்திற்கு வடக்கு ஹுவாஷன் ஒரு முக்கிய பங்களிப்பாக இருந்தது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், பூகம்பங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளில் இருந்து எதிர்கால சேதத்தை குறைப்பதற்கான உத்திகள் பற்றிய விசாரணையை ஷாங்சி பூகம்பம் தூண்டியது என்றுதான் சொல்ல வேண்டும். இதன் விளைவாக, கல் கட்டிடங்கள் மரம் மற்றும் மூங்கில் போன்ற மென்மையான, அதிக பூகம்பத்தை தாங்கும் பொருட்களால் கட்டப்பட்டன.