பெட்டியில் சடலத்தை அனுப்பி ரூ.1.3 கோடி கேட்டு மிரட்டிய கும்பல்
யெண்டகண்டி:
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் யெண்டகண்டி கிராமத்தில் துளசி என்ற பெண் வீடு கட்டி வருகிறார். கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்கு நேற்று இரவு ஒரு ஆட்டோவில் வந்த நபர்கள் ஒரு பெட்டியை டெலிவரி செய்துள்ளனர். அந்த பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் அடையாளம் தெரியாத, சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் இருந்தது.
அத்துடன் ஒரு கடிதமும் இருந்தது. அதில், "துளசியின் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய 3 லட்சம் ரூபாய் கடனுக்கு வட்டியும் முதலுமாக ரூ.1.35 கோடி கொடுக்க வேண்டும். மோசமான விளைவுகள் நடக்க விரும்பவில்லை என்றால், இந்த பணத்தை செலுத்தவேண்டும்" என மிரட்டப்படடிருந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த துளசியின் குடும்பத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துளசிக்கு உதவிகள் செய்து வந்தது தெரியவந்தது. நேற்று மோட்டார்கள் உள்ளிட்ட சில மின் சாதனங்கள் மற்றும் இதர பொருட்களை அனுப்பி வைப்பதாக செய்தி அனுப்பியிருக்கிறார். ஆனால் சடலத்தை வைத்து பெட்டியை டெலிவரி செய்துள்ளனர்.
பணம் கேட்டு மிரட்டிய கும்பல் குறித்து போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மூன்று நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போனவர்கள் குறித்த தகவலை சரிபார்த்துவருவதாகவும், பெட்டியில் அனுப்பப்பட்ட உடலை பரிசோதனை செய்தபின்னர் கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்றும் போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்தார்.
துளசியின் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனார். இதுவரை வீடு திரும்பவில்லை. இதனால் துளசி தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இப்போது தனியாக அப்பகுதியில் வீடு கட்டி வருகிறார்.
இதற்கிடையே, அந்த குடும்பத்தின் இளைய மருமகனை நேற்றில் இருந்து காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.