டெல்லியில் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு சமீப நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் அதிகம் வந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று டெல்லியில் பல்வேறு பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது இந்த வாரத்தின் 3வது வெடிகுண்டு மிரட்டல் சம்பவமாகும். இதன்படி, டெல்லியில் கடந்த 11 நாட்களில் 6 முறை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் வந்த பள்ளிகளில் பாதுகாப்புப் பணியாளர்கள் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால் சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் கிடைக்கவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் துவாரகாவில் உள்ள 5 பள்ளிகளுக்கும், மற்ற மாவட்டங்களில் உள்ள சில பள்ளிகளுக்கும் இதே போன்ற இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததாக தீயணைப்புத்துறை அதிகாரி கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இ-மெயில் அனுப்பிய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.