நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி? வரும் 26ம் தேதி கடலூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!
வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
டெல்டா மாவட்டங்களில் வரும் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக குறிப்பிட்டுள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி?
மேலும், வங்கக்கடலில் தெற்கு அந்தமானை ஒட்டி உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வரும் 23ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
கடலூரில் மிக கனமழைக்கு வாய்ப்பு
மேலும், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல், வரும் 26ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் மிக கனமழைக்கும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.