திடீரென ரஜினியை சந்தித்த நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்... காரணம் என்ன?
சூப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்படும் ரஜினிகாந்தை மிகக் கடுமையாக விமர்சித்து வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென நேற்று சந்தித்தது பெரும் பேசுபொருளாகியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு, மே மாதம் சென்னையில் தொடர்ந்து 5 நாட்களுக்கு ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் ‘‘சிஸ்டம் சரியில்ல’’ என்று பேசினார். பின்னர் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி 2018 ஆகஸ்டில் மறைந்தபிறகு டிசம்பர் 26 முதல் 31-ம் தேதி வரை, இரண்டாம் கட்டமாக ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போகிறோம். போருக்குத் தயாராக இருங்கள் என அழைப்பு விடுத்தார்.
இதனால் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அப்போது முதல் ரஜினிகாந்தை தமிழர் அல்லாதவர் தமிழ்நாட்டை ஆட்சி செய்ய ஆசைப்படலாமா என கடுமையாக சாடியும் விமர்சித்தும் வந்தவர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
தமிழ்நாட்டில் அதுவரை பூச்செண்டுகளையே வாங்கிப் பழகிய ரஜினிக்கு அதுவரை சந்தித்திராத வார்த்தைத் தாக்குதல்களை சீமானும், நாம் தமிழர் கட்சியினரும் மேடைகளிலும், சமூக வலைதளங்களிலும் தொடுத்தனர். சுமார் 2 ஆண்டுகள் அரசியல் பிரவேசத்தை ஆறப்போட்ட ரஜினி, தனது உடல் நிலை சரியில்லை என்பதாலும் மருத்துவர்கள் தீர்த்துக் கூறிவிட்டதாலும் கட்சி தொடங்கி அரசியலுக்கு வரமுடியவில்லை என 2020 இறுதியில் அறிவித்து ரசிகர்களின் எண்ணங்களுக்கு வேட்டை வைத்தார். அதன்பிறகே ரஜினி மீதான விமர்சனங்களுக்கு சீமான் முற்றுப்புள்ளி வைத்தார்.
அரசியல் களத்தில் ஒதுங்கிவிட்டாலும் திரைத்துறையில் முன்னிலும் வேகம் காட்டத் தொடங்கினார் ரஜினி. இந்தப் பின்னணியில், சினிமாவில் காக்கா, கழுகுக் கதைகளை ரஜினியும் விஜயும் தத்தமது மேடைகளில் கூறும் அளவிற்கு அவர்களுக்கு இடையே பனிப்போர் ஏற்பட்டிருப்பதாக பேசப்பட்டது.
இதனிடையே ரஜினியை போல் ரசிகர்களைக் காக்க வைக்காமல் சட்டென கடந்த பிப்ரவரியில் தவெக-வை தொடங்கினார் விஜய். அப்போது அதை வரவேற்ற சீமான் விஜயை தம்பி என வாஞ்சையாக விளித்தார். எனினும் சீமான் கடுமையாக விமர்சிக்கும் திராவிடக் கொள்கையை, தனது இரு கண்களில் ஒன்று என விஜய் அறிவித்ததும் அவரை சீமான் கடுமையாக சாடத்தொடங்கினார். 2026-ல் தனித்தே போட்டி என சீமான் அறிவித்தார். அரசியல் களத்தில் தற்போது இருவரும் இணைய முடியாத துருவங்களாகவே இவ்விருவரும் பார்க்கப்படுகின்றனர்.
தான் மிகவும் நம்பிய விஜயுடன் கொள்கை மோதல் ஏற்பட்ட நிலையில், சற்றும் எதிர்பாராத வகையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்துக்கு சீமான் நேற்றிரவு சென்று அவரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்ததாக கூறப்படுகிறது. அரசியல்ரீதியாக இருவரும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக தொடர்ந்து ரஜினியை கடுமையாக சாடியவரான சீமான், விஜய் தன்னுடன் இணக்கம் காட்டாத சூழலில் அவரை சந்தித்திருப்பது பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டுள்ளது.
சீமான் ரஜினியிடம் தனக்கு ஆதரவுத் தரக் கோரியிருக்கக் கூடும் என்றும் தமிழக அரசியல் பற்றி குரல் தரும்படி அழுத்தம் தந்திருக்கக் கூடும் என்றும் நெட்டிசன்கள் தங்கள் கற்பனைக் குதிரைகளை தட்டிவிட்டு விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.