மேற்குவங்கத்தில் 9 வயது சிறுமி கொலை.. காவல் நிலையத்திற்கு தீவைத்த கிராம மக்கள்

9-year-old-rape-murder-bengal-villagers-fire-police-outpost
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-10-06 16:47:00

மேற்கு வங்கம் மாநிலம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 9 வயது சிறுமி ஒருவர் கடந்த வெள்ளி கிழமை காணாமல் போனார். பிறகு அன்று இரவே அருகில் இருந்த ஒரு குளத்தில் இருந்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த விவகாரம் அந்த மாவட்டத்தில் பெரும் கலவரமாக வெடித்துள்ளது.

தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிந்துவந்த ஒரு சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் பயிற்சி வகுப்புக்காக சென்றுள்ளார். பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்தச் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால், அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால், அவர்கள் அருகில் இருந்த ஒரு காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால், அங்கிருந்த காவல்துறையினர் புகாரை ஏற்க மறுத்து வேறு ஒரு காவல்நிலையத்தில் புகார் கொடுக்கும் படி தெரிவித்தனர் என அந்தச் சிறுமியின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

அதேசமயம், அவர்கள் வசிக்கும் பகுதியின் அருகே இருந்த ஒரு குளத்தில் இருந்து அந்தச் சிறுமியின் உடல் வெள்ளிக்கிழமை இரவு கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து சனிக்கிழமை காலை ஆத்திரம் அடைந்த அந்தச் சிறுமியின் பெற்றோரும், உறவினர்களும், அந்தக் கிராமத்தினரும், தங்கள் கைகளில் துடைப்பம், கட்டைகள் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு, அங்கிருந்த காவல்நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

அங்கு காவல்துறையினருக்கும் இவர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு இன்னும் ஆத்திரம் அடைந்த அந்தக் கிராமத்தினர் அந்த காவல்நிலையத்திற்கு தீவைத்தனர். பிறகு காவல்துறையினர் அவர்களை கட்டுப்படுத்த தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் அந்தக் காவல்நிலையத்தில் இருந்த சில ஆவணங்கள் தீயில் கருகின.

இந்த விவகாரம் குறித்து தெரிவித்த காவல்துறையினர், “இந்த விவகாரத்தில் 19 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னும் இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என விசாரித்து வருகிறோம். தற்போது நிலைமையை சீராக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அது தான் எங்களின் முதல் வேலை. சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா என்றும் விசாரித்து வருகிறோம். அதேபோல், சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அந்தப் பரிசோதனையின் முடிவிலே என்ன நடந்தது என்று தெரியவரும்” என்றார்.

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் முழுவதும் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல், எதிர்க்கட்சியான பா.ஜ.க. இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக பேசிய மேற்குவங்க பா.ஜ.க. தலைவர் சுகந்தோ மஜும்தார், “அவர்கள் புகாரை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இது துர்காவை பூஜிக்கும் நேரம், அத்தகைய நேரத்தில், ஒரு மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

வீட்டில் இருக்கும் துர்க்கை பாதுகாப்பாக இல்லாவிட்டால் எந்த துர்க்கையை வணங்குவோம்? இதற்கெல்லாம் காரணம் மம்தா பானர்ஜிதான். அவர், போலீஸ் எளிதாக எப்ஐஆர் பதிவு செய்யக்கூடாது என்ற செய்தியை தெரிவித்திருக்கிறார்” என்று குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் பா.ஜ.க.வினர் சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்திவருகின்றனர்.

Ads
Recent National News
Trending News
Recent News
Prev
Next