IND vs BAN : 12 ஓவர்களில் ஆட்டத்தை முடித்த இந்திய அணி… வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20-யில் அதிரடி வெற்றி

cricket-india-vs-bangladesh-t20-team-india-finish-2nd-innings-in-just-12-overs-won-by-7-wickets
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-10-06 22:42:00

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்கியது.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நடைபெற்ற வரும் முதல் டி20 போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியின் ஆடும் லெவனில், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), நிதிஷ் ரெட்டி, ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வங்கதேச அணியில் தொடக்க வீரர்கள் பர்வேஸ் ஹொசைன் 8 ரன்னும், லிட்டன் தாஸ் 4 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்க சிறிது நேரம் தாக்குப் பிடித்த கேப்டன் நஜ்முல்ஹொசைன் 27 ரன்கள் எடுத்தார்.

தவ்ஹித் ஹிருதாய் 12 ரன்களும், ரிசாத் ஹொசைன் 11 ரன்களும், தஸ்கின் அகமது 12 ரன்களும் எடுத்தனர். வங்கதேச அணியில் மெஹிதி ஹசன் மட்டும் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்கள் சேர்த்துக் கொண்டிருந்தார்.

32 பந்துகளை எதிர்கொண்ட அவர் 35 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார்.  19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேச அணி 127 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப்சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.

தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 1 சிக்சர் 2 பவுண்டரியுடன் 7 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தலா 29 ரன்கள் சேர்த்து வெளியேறினர்.  அதிரடியாக ரன்கள் குவித்த ஹர்திக் பாண்ட்யா 2 சிக்சர் மற்றும் 5 பவுண்டரியுடன் 16 பந்துகளில் 39 ரன்கள் எடுக்க, 11.5 ஓவரில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்த இந்திய அணி 132 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Ads
Recent Sports News
Trending News
Recent News
Prev
Next