மெரினா வான் சாகச நிகழ்ச்சியை காண வந்த மூவர் பரிதாப பலி!

old-man-passes-away-in-chennai-marina-air-show
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-10-06 21:18:00

இந்திய விமானப் படை தனது 92 ஆண்டுகளை நிறைவு செய்தது. இதனை முன்னிட்டு இன்று (6ஆம் தேதி) சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விமானப் படை விமான சாகச நிகழ்ச்சியில் மொத்தம் 72 விமானங்கள் பங்கேற்று பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை நிகழ்த்தின. இன்று காலை 11 மணிக்குத் துவங்கிய சாகச நிகழ்ச்சி பிற்பகல் 1 மணிக்கு நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியைக் காண்பதற்கு 15 லட்சத்திற்கு அதிகமானோர் வரக்கூடும் என முன்பே கணிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று நடந்த சாகச நிகழ்ச்சியில் 15 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இதன் மூலம், இன்றைய நிகழ்ச்சி லிம்கா சாதனை புத்தகத்தில் ‘உலகிலேயே அதிக நபர்கள் கண்டுகளித்த போர் விமான சாகச நிகழ்ச்சி’ என்ற சாதனை படைத்து இடம் பெற்றது. மேலும், இந்த சாகச நிகழ்ச்சியைக் காணவந்துவிட்டுத் திரும்பிய மக்கள் கடுமையான கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசலில் திணறினர். நிகழ்ச்சி முடிந்து இரண்டு, மூன்று மணி நேரம் கழித்தே சென்னையின் முக்கிய சாலைகள் போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுபட்டது. மேலும், ரயில் நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள், பேருந்துகள் உள்ளிட்டவற்றில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

விடுமுறை தினம், சென்னையில் நடக்கும் மிகப்பெரிய விமான நிகழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால், காலை முதலே மக்கள் தங்கள் குழந்தைகள், வீட்டில் உள்ள முதியவர்களுடன் சாகச நிகழ்ச்சியைக் காண மெரினாவிற்கு திரண்டனர். இதனால் கூட்டம் அதிகளவில் இருந்தது.

இந்நிலையில், வெயிலின் தாக்கமும் இருந்ததால், சாகச நிகழ்ச்சியை காணவந்த சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது. அப்படி மயக்கம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான் (வயது 60) என்பவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

அதேபோல், INS அருகே நின்று சாகச நிகழ்ச்சியைக் கண்ட திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திகேயன் (34) மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். மேலும், ஒருவரும் பலியாகியுள்ளார். இதன் மூலம், சாகச நிகழ்ச்சியைக் காண வந்த மூவர் பலியாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து போலீஸார் அவரது மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next