மெரினா வான் சாகசம் : உயிரிழப்புக்கு இது தான் காரணம்; பூவுலகின் நண்பர்கள் சொன்ன முக்கிய காரணம்

three-people-passes-away-in-chennai-air-show-poovulagin-nanbargal-tweet
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-10-06 21:21:00

சென்னை மெரினாவில் இன்று (6ம் தேதி) நடந்த விமானப் படை வான் சாகச நிகழ்ச்சியில், மொத்தமாக 15 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டதாக தெரியவருகிறது.

இதனால், மெரினா காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மக்களால் நடந்துகூட செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. அதேபோல், ரயில் நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இப்படியான சூழலில் இன்று நடந்த விமான சாகச நிகழ்ச்சியைப் பார்க்க வந்தவர்கள் கடும் வெப்பத்தில் அவதியுற்றனர். மேலும், வெயிலின் தாக்கத்தால் 230க்கும் மேற்பட்டோருக்கு மயக்கம் ஏற்பட்டது. அதில், 90 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில், தற்போதுவரை மூன்று நபர்கள் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பூவுலகின் நண்பர்கள் தங்கள் எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “சென்னை மெரினாவில் நடந்த 2024ம் ஆண்டு விமானப்படையின் வான் சாகச நிகழ்வைக் காண வந்த பலரும் வெயிலின் தாக்கம் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார், 50க்கும் மேற்பட்டோர் மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று சென்னையில் 36°C வரை வெப்பநிலை இருக்கும் என நேற்றே வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இன்று சென்னையில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.3 °C. மெரினாவில் நிலவிய ஈரப்பதத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் 43 °Cக்கு மேலான வெப்பத்தை மக்கள் உணர்ந்திருப்பார்கள்.

பல லட்சம் பேர் கூடுவார்கள் என்பதும் முன்பே எதிர்ப்பார்க்கபட்ட ஒன்றுதான். ஆனாலும் நிகழ்ச்சிக்கு கூட்டம் கூட்டுவதில் மட்டுமே ஆர்வம் காட்டிய இந்திய விமானப்படை - ஊடக ஒருங்கிணைப்பு மையம் மற்றும் பாதுகாப்புப் படை மக்கள் தொடர்பு ஆகியவை மற்ற விஷயங்களில் அலட்சியம் காட்டியதே இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரும் கூட்டம் கூடும் என எதிர்பார்க்கப்படும் அரசியல் கட்சி மாநாடுகள், மதக் கூட்டங்கள் போன்றவற்றை நடத்தும்போது தீவிர வானிலையையும் கருத்தில் கொண்டு மட்டுமே நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட வெப்ப செயல் திட்டங்கள் அனைத்தும் காகித அளவில் மட்டுமே இருப்பது வேதனைக்குரியது” எனத் தெரிவித்துள்ளது.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next