Israel | ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு 'விநோத' தாக்குதல்... லெபனானை நிலைகுலைய செய்யும் இஸ்ரேல்!

sonic-boom-attack-against-lebnon-by-isreal-after-pager-attack
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-09-20 07:37:00

லெபனானில் பேஜர்கள், வாக்கி டாக்கிகளை வெடிக்கச் செய்து நூதன தாக்குதல்களை மேற்கொண்ட இஸ்ரேல், மூன்றாவது நாளில் ‘சோனிக் பூம்’ தாக்குதலை மேற்கொண்டது. இதனால் மக்கள் நிலைகுலைந்துபோயினர்.

அரபு நாடுகளுக்கு மத்தியில் சாண்ட்விச் போல் அமைந்துள்ள இஸ்ரேல், நாலாபுறமும் உள்ள சிரியா, லெபனான் உள்ளிட்ட நாடுகள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாக ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் காசா மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது இஸ்ரேல். தன் சில நூறு பிணைக் கைதிகளை விடுவிக்கும் இஸ்ரேலின் முயற்சியில் காசா பகுதியில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர் பறிபோய் உள்ளது. இதனால் ஆத்திரமுற்ற அண்டை நாடுகளில் ஒன்றான லெபனானில் உள்ள போராளிக்குழுவான ஹிஸ்புல்லா, இஸ்ரேல் மீது ஏவுகணை மழை பொழிந்து தாக்குதல் நடத்தியது.

பல நாள் எதிரியான ஹிஸ்புல்லாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க நினைத்த இஸ்ரேல், கடந்த செவ்வாய்க்கிழமை மிக நூதனமான, உலகில் இதுவரை யாருமே கண்டிராத, கேட்டிராத தாக்குதலை நடத்தியது. உலகில் முற்றிலும் அழிந்துவிட்டதாக கருதப்படும் பேஜர்களை வெடிக்கச் செய்தது.

செல்போன் சிக்னல்கள் ஒட்டுகேட்கப்படும் என்ற எண்ணத்தில், பேஜர்களை பயன்படுத்திய அனைவரும் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். இத்துல்லியத் தாக்குதலில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 2 ஆயிரத்து 700 க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.

ஹிஸ்புல்லா அமைப்பினர் வித்தியாசமாக யோசித்தால் இஸ்ரேல் ஒரு படி மேலே போய், அவர்கள் பயன்படுத்தும் பேஜர்களில் சிறிதளவு வெடிபொருள்களை அவை லெபனானுக்கு வரும் முன்பாகவே பொருத்தி வெடிக்க வைத்துள்ளது.

இந்த தாக்குதலைப் பார்த்து உலகமே அசந்து போனது. பேஜர்களை தயாரித்த ஹங்கேரி நிறுவனமே இஸ்ரேலுக்குச் சொந்தமானது என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.

முதல் நாள் இப்படிப் போக, இரண்டாவது நாள் என்ன ஆகுமோ என லெபனான் மக்கள் குறிப்பாக ஹிஸ்புல்லா அமைப்பினர் இருந்தபோது, ஹிஸ்புல்லா அமைப்பினரின் கைகளில் இருந்த வாக்கி டாக்கிகள் வெடித்துச் சிதறின. இந்த தாக்குதலில் 4 சிறுவர்கள் உட்பட 20 க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் சில நூறு பேர் காயமுற்றனர்.

இந்நிலையில் 3ஆவது நாளில் லெபனானில் இஸ்ரேலின் ஜெட் விமானங்கள் சீறிப் பாய்ந்ததுடன் ஒலியின் வேகத்திற்கு ஈடாகவும், அதே நேரத்தில் மிகத் தாழ்வாக காதைக் கிழிக்கும் ஓசையுடன் பறந்தன.

‘சோனிக் பூம்’ என்ற இந்த தாக்குதலால் மக்கள் வீடுகளில் இருந்து காதுகளை மூடிக் கொண்டு அலறியபடி வெளியே ஓடிவந்தனர். இது உடல் ரீதியாக பெரிய பாதிப்பை ஏற்படுத்தாவிடினும் மக்கள் மனங்களில் பீதியையும், பதற்றத்தையும் அதிகரித்தது.

இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் அரசு எவ்வித விளக்கமும் கொடுக்காத நிலையில், தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் ராணுவம் செல்போன் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தி ஹிஸ்புல்லா செயல்பாட்டாளர்களின் இருப்பிடங்களைக் கண்டறிந்து தாக்குதல் நடத்தி வந்த நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பினர் செல்போன் பயன்படுத்த அதன் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் தடை விதித்தார்.

செல்போனுக்கு பதிலாக பேஜர் கருவிகள் கொள்முதல் செய்வதற்கு ஹிஸ்புல்லா அமைப்பினர் அதிகளவு முதலீடு செய்யத் தொடங்கினர். இதனையறிந்த இஸ்ரேல் போலி கம்பெனிகளை உருவாக்கி அதன்மூலம் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு பேஜர் கருவிகளை வழங்கியதும் தெரியவந்துள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பினர் ஒரு தற்காப்பு நடவடிக்கையாக பேஜர் கருவிகளை பயன்படுத்தி வந்த நிலையில், இஸ்ரேல் உளவுத்துறை அதிகாரிகள் அந்த பேஜர்களை வைத்தே அவர்களை நிலைகுலைய செய்துள்ளனர்.

பேஜர், வாக்கி டாக்கி வெடிப்பு, சோனிக் பூம் என பீதி ஏற்பட்ட நிலையில் நான்காவது நாளில் என்ன நடக்குமோ என பயத்தில் லெபனான் மக்கள் உறைந்துபோயிருக்கின்றனர்.

Ads
Recent International News
Trending News
Recent News
Prev
Next