சிந்து நதி நீர் ஒப்பந்த மறு ஆய்வு.. இந்தியாவின் நோட்டீசுக்கு பாகிஸ்தான் பதில்

pakistan-urges-india-to-honour-provisions-of-indus-water-treaty
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-09-19 18:11:00

இஸ்லாமாபாத்:

எல்லை தாண்டிய நதிகளின் நீரை பயன்படுத்துவது தொடர்பாக இந்தியாவும் பாகிஸ்தானும் 1960-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதில் உலக வங்கியும் கையெழுத்திட்டுள்ளது. இது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முக்கிய ஒப்பந்தங்களில் ஒன்றாகும். இரு நாடுகளிடையே போர்கள் மற்றும் பதற்றங்கள் இருந்தபோதிலும் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் தொடர்ந்து பின்பற்றப்படுகிறது.

ஆனால், சிந்து நதி நீர் விஷயத்தில் இந்தியாவுக்கு உரிய பங்கு கிடைக்கவில்லை என்பது நீண்ட கால குறைபாடாக உள்ளது.

இந்நிலையில், தற்போதைய சூழ்நிலையில் அடிப்படையான மற்றும் எதிர்பாராத மாற்றங்களை மேற்கோள் காட்டி, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா கடந்த மாதம் 30-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.

மக்கள் தொகை மற்றும் தண்ணீர் தேவை அதிகரிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, 60 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்யவேண்டும் என இந்தியா நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தொடர்ச்சியான எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் தாக்கமும் இந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய கோருவதற்கான காரணங்களில் ஒன்றாக இந்தியா குறிப்பிட்டிருக்கிறது.

இந்தியாவின் நோட்டீஸ் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் சஹ்ரா பலோச்சிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை முக்கியமான ஒன்றாக பாகிஸ்தான் கருதுகிறது. அந்த ஒப்பந்தத்தின் விதிகளுக்கு இந்தியாவும் இணங்கும் என்று நம்புகிறது.

இரு நாடுகளும் சிந்து நதி நீர் ஆணையர்களைக் கொண்ட ஒரு அமைப்பை கொண்டிருக்கின்றன. ஒப்பந்தம் பற்றிய அனைத்து விவகாரங்களையும் அதில் விவாதிக்கலாம். அதேசமயம், ஒப்பந்தம் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான எந்த நடவடிக்கையாக இருந்தாலும், அது ஒப்பந்தத்தின் விதிகளுக்கு உட்பட்டு எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஒப்பந்தத்தை திருத்துவதில் பாகிஸ்தான் ஆர்வம் காட்டவில்லை என்பதை வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரின் பதில் காட்டுவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Ads
Recent International News
Trending News
Recent News
Prev
Next