“குரூப் - 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களை அதிகரித்திடுக” - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

opposition-leader-edappadi-k-palanisamy-condemn-on-tnpsc-group-for-exam
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-09-19 18:02:00

தமிழக அரசுத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு, தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 32 வகையான பணிகளுக்கு 6,244 பேரை தேர்வு செய்வதற்கான குரூப் 4, கடந்த ஜனவரி 30ம் தேதி அறிவிக்கப்பட்டு, ஜூன் 9ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது.

இந்நிலையில் இந்தத் தேர்வுக்கான முடிவுகள் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம், 20,000 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், 6,244 இடங்கள் மட்டுமே நிரப்புவதா, இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களை திமுக அரசு வஞ்சிக்கிறது என எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “ஆட்சிக்கு வருவதற்காக சொன்னது அத்தனையும் பொய் என்ற ரீதியில், கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்ட திமுக அரசு, அனைத்து தரப்பு மக்களையும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

“தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவர்” என்றும் தேர்தல் வாக்குறுதியை அள்ளி வீசிவிட்டு, தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தொகுப்பில் 20,000 இடங்கள் நிரப்ப வேண்டிய சூழலில், நடப்பாண்டில் அதில் வெறும் கால் பங்கான 6,244 இடங்களை மட்டுமே நிரப்புவதன் மூலம் இத்தேர்வைக் கனவாகக் கொண்ட லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சிக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

போட்டித் தேர்வு மாணவர்களின் ஒருமித்த கோரிக்கையினைக் கருத்திற்கொண்டு, நடப்பாண்டு குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்குமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Trending News
Recent News
Prev
Next