Khazima | பத்துக்கு பத்து வீடு..! ஆஸ்பெஸ்டாஸ் கூரை..! சாதித்து காட்டிய கேரம் நாயகி காசிமா
பத்துக்கு பத்து வீடு, ஆஸ்பெஸ்டாஸ் கூரை என வாழ்ந்தாலும், தனது சாதனை மூலம் தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் கேரம் நாயகி காசிமா. வெற்றிக்கு வறுமை தடை அல்ல என நிரூபித்துள்ள காசிமாவின் வெற்றிப் பயணம் குறித்து பார்க்கலாம்.
பத்துக்கு பத்து வாடகை வீட்டில்தான் பதக்கங்களும், கோப்பைகளும் குவிந்து கிடக்கின்றன. வெற்றிக்கு வறுமை ஒரு தடையே இல்லை என நிரூபித்துள்ளார் கேரம் நாயகி காசிமா.
வடசென்னைக்காரர்களின் ரத்தத்தில் ஊறிப்போன கேரமுக்கு புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மெஹபூப் பாட்ஷா மட்டும் விதிவிலக்கா என்ன? கேரம் மீது தீராத காதல் கொண்ட பாட்ஷா, 90களிலேயே உலக சாம்பியன் பட்டம் வென்ற மரிய இருதயத்தைப் போல் தனது மகனை எப்படியாவது பெரிய கேரம் வீரராக்க நினைத்தார். கொரோனா கொடுந்துயரம் அதற்கு பிரேக் போட்ட நிலையில், நான் இருக்கிறேன் என வந்து நின்றார் மகள் காசிமா. வறுமைக்கும், பள்ளிப்படிப்புக்கும் இடையே 7 வயதில் தொடங்கிய காசிமாவின் பயணம் இன்று உலக சாம்பியனாக முத்தாய்ப்பு பெற்றுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடந்த உலக கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற காசிமா, தனிநபர், இரட்டையர் பிரிவு மற்றும் குழு என ஒரே நேரத்தில் 3 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினார். இந்நிலையில்தான் கேரமும் கொண்டாடப்படுமா என நியூஸ்18 தமிழ்நாடு செய்தித் தொகுப்பை ஒளிபரப்பியது.
இந்த நிலையில், காசிமா உள்ளிட்ட கேரம் வீரர்களுக்கு, தமிழ்நாடு அரசு ஊக்கத் தொகை வழங்கியுள்ளது. துணை முதலமைச்சரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் காசிமாவுக்கு ஒரு கோடி ரூபாயும், இரட்டையர் பிரிவு மற்றும் குழு போட்டியில் தலா ஒரு தங்கப் பதக்கம் வென்ற வி.மித்ராவுக்கு 50 லட்ச ரூபாயும், குழு போட்டியில் ஒரு தங்கம் மற்றும் இரட்டையர் பிரிவில் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்ற கே.நாகஜோதிக்கு 50 லட்ச ரூபாயும் வழங்கினார்.
இதுதொடர்பாக நியூஸ்18க்கு பேட்டி அளித்த காசிமா, இவ்வளவு தொகையை பார்த்தே இல்லை என்றார். மகள் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காக போட்டிக்கு செல்லும் போது, கடன் வாங்கி ஏ.சி. பெட்டியில் டிக்கெட் புக் செய்ததாகக் கூறினார் காசிமாவின் தந்தை.