தீபமலை மீது ஏற்றப்பட்ட மகாதீபம் இன்றுடன் நிறைவு
திருவண்ணாமலை,
பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவையொட்டி தினமும் காலை மற்றும் இரவில் பஞ்சமூர்த்திகள் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான கடந்த 13-ந்தேதி அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டன.விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, மகா தீபத்தை தரிசனம் செய்தனர். தொடர்ந்து 11 நாட்கள் மகா தீபம் காட்சி அளிக்கும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி 11 நாள் மகாதீபம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி தீபமலை உச்சியில் ஈசன் ஒளி வடிவில் பிரகாசமாகக் காட்சியளித்து வருகிறார். இதனையடுத்து மலை மீது உள்ள கொப்பரையை கீழே இறக்கி வந்து கோவிலில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அதில் உள்ள மையை சேகரித்து ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜருக்கு தீப 'மை' வைக்கப்படும். பின்னர் பக்தர்களுக்கு தீப 'மை' பிரசாதமாக வழங்கப்படும்.