ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் இருந்து 5 நாட்களுக்கு பிறகு சுமார் 300-க்கும் அதிகமான விசைப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது 6 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்துள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்களுக்காக விரித்திருந்த வலைகளையும் அறுத்து கடலில் வீசி எறிந்ததாக கூறப்படுகிறது.
இதனால் நேற்று காலை குறைந்த எண்ணிக்கையிலான மீன்களுடன் மீனவர்கள் கரை திரும்பினார்கள். இலங்கை கடற்படை விரட்டியடிப்பு குறித்து ராமேசுவரம் மீனவர்கள் யாரும் மீன்துறை அலுவலகம் மற்றும் கடலோர காவல் நிலையத்திலோ எந்த ஒரு புகாரும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து உளவுப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.