நீடித்த பேட்டரி லைப்... ஆப்பிள் AI அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமான ஆப்பிள் மேக்புக் ப்ரோ M4!

apple-macbook-pro-m4-launched-in-india-with-extended-battery-life-apple-intelligence-features
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-11-02 20:13:00

நானோ டெக்ஸ்ச்சர் டிஸ்பிளேயுடன் ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ப்ரோ எம்4 மாடல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அக்.30ஆம் தேதி நடந்த ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய அறிமுக நிகழ்வை, தனது எம்4 மேக்புக் ப்ரோ தொடருடன் ஆப்பிள் நிறைவு செய்துள்ளது. ஆப்பிளின் எதிர்காலத்தில் எம்4 சிப்செட் ஒரு முக்கிய பங்காற்ற இருக்கிறது. தற்போது இது சில நுண்ணறிவு அம்சங்களையும் கொண்டுள்ளது.

எம்4 மேக்புக் ப்ரோவைப் பொறுத்தவரையில், அதன் வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் இல்லை. ஆனால், அதன் ஹார்ட்டுவேரில் பயனர்களை ஈர்க்கக்கூடிய சில முக்கிய மாற்றங்களை ஆப்பிள் கொண்டுவந்துள்ளது. எம்4 ப்ரோ மற்றும் எம்4 மேக்ஸ் இதன் முந்தைய பதிப்புகளை விட வேகமான செயல்திறன் மற்றும் நீண்ட பேட்டரி ஆயுள் ஆகியவற்றை உறுதி செய்கிறது.

இந்தியாவில் ஆப்பிள் மேக்புக் ப்ரோ எம்4 விலை

ஆப்பிள் மேக்புக் ப்ரோ எம்4 ஆனது 14 இன்ச் மற்றும் 16 இன்ச் மாடல்களில் விற்பனைக்கு வருகிறது, இதன் ஆரம்ப விலை முறையே ரூ.1,69,900 மற்றும் ரூ.2,49,900 ஆகும். யூசர்களின் தேவை மற்றும் பட்ஜெட்டைப் பொறுத்து எம்4, எம்4 ப்ரோ அல்லது எம்4 மேக்ஸ் ஆகிய வகைகளில் மேக்புக் கிடைக்கிறது. ஆப்பிள் மேக்புக் ப்ரோ எம்4-ஐ தற்போது ப்ரீஆர்டர் செய்ய முடியும் மற்றும் நவம்பர் 8 முதல் இது இந்தியாவில் கிடைக்கும்.

மேக்புக் ப்ரோ எம்4: புதிய அம்சங்கள் என்ன?

மேக்புக் ப்ரோ சீரிஸ் எம்4 சிப்களுடன் 16GB ரேமுடன் வருகிறது. மேலும் 14-இன்ச் எம்4 மேக்ஸ் மாடலில், 64GB வரை ரேமை அப்கிரேட் செய்து கொள்ளலாம். 16 இன்ச் மாடலில் 128 GB ரேம் மற்றும் 8 TB வரையிலான ஸ்டோரேஜை பெற முடியும்.

இந்த மேக்புக் முன்பு இருந்தது போலவே ஒரு லிக்விட் ரெட்டினா எக்ஸ்டிஆர் (Liquid Retina XDR) டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, ஆனால் நானோ-டெக்ஸ்சர் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது உங்களுக்கு 1000 நிட்ஸ் வரையிலான பிரைட்னஸை வழங்குகிறது. 14 இன்ச் மாடல் எம்4 சிப்செட்டுடன் சுமார் 1.55 கிலோ எடையைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் 16 இன்ச் மாடல் அதன் பெரிய அளவின் காரணமாக 2.14 கிலோ எடையில் கிடைக்கிறது.

14 இன்ச் மேக்புக் ப்ரோ தண்டர்போல்ட் 4 ஃபோர்ட்களைக் கொண்டுள்ளது. அதே சமயம் 16 இன்ச் மாடல் புதிய தண்டர்போல்ட் 5 உடன் வருகிறது. இந்த புதிய எம்4 சிப்செட் மூலம் பேட்டரி ஆயுள் நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், இது குறித்து உண்மையான தகவல் மற்றும் விமர்சனங்கள் வரும் வாரங்களில் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் புதிய 12MP சென்டர்ஸ்டேஜ் கேமராவை முன்பக்கத்தில் சேர்த்துள்ளது. அதுமட்டுமின்றி, எம்4 தொடரில் இணைக்கப்பட்டுள்ள ஆப்பிள் நுண்ணறிவு (Apple Intelligence) அம்சம் இதன் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இது புதிய A-சீரிஸ் மற்றும் M-சீரிஸ் சிப்களை இயக்கும் ஐபோன் மற்றும் ஐபேட் யூசர்களுக்கு கிடைக்கும் அனைத்து AI அம்சங்களையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News
Recent News
Prev
Next