கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு: மாணவிகளுக்கு கருணைத் தொகை வழங்க ஐகோர்ட் உத்தரவு

krishnagiri-sex-case-court-orders-ex-gratia-to-female-students
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-09-19 21:08:00

சென்னை,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் போலியாக என்.சி.சி. முகாம் நடத்தி 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காவேரிப்பட்டணம் காந்திநகர் காலனியை சேர்ந்த சிவராமன் (35 ) என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். அரசியல் கட்சியை சேர்ந்த அவர் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். ரகசிய இடத்தில் வைத்து சிவராமனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வந்த நிலையில், சிவராமன் தற்கொலை செய்து உயிரிழந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரிய மனுவில் சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு 2 வாரங்களில் கருணைத் தொகை வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகள் 23 பேரில் 2 பேருக்கு தலா ரூ.5 லட்சமும், மற்றவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. கருணைத் தொகையை சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியிடமே வசூலிக்கவும் அனுமதிக்கப்பட்டது.

இதற்கிடையே, சம்பவம் தொடர்பாக இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், பாதிக்கப்பட்ட 23 மாணவிகள் மற்றும் 219 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. வழக்கு தொடர்பான விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next