ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி... இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லவில்லை என்றால் என்ன நடக்கும்?

cricket-what-happens-if-india-do-not-travel-to-pakistan-for-2025-champions-trophy
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-09-19 11:21:00

பாகிஸ்தானில் நடக்கவுள்ள 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் குறித்து ஐசிசி சில தகவல்களை வெளியிட்டுள்ளன.

2024 டி20 உலகக் கோப்பையில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்தியா தயாராகி வருகிறது. 1996-ல் பாகிஸ்தானில் ஒருநாள் உலகக் கோப்பை நடந்தது. அதன்பிறகு, பாகிஸ்தானில் நீண்ட நாட்களுக்குப் பின் நடக்கவுள்ள ஐசிசி நிகழ்வு இந்த சாம்பியன்ஸ் டிராபி. இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள நெருக்கடியான அரசியல் உறவுகள் காரணமாக, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்பதில் சிக்கல்கள் உள்ளன.

பாகிஸ்தானுக்கு இந்தியா பயணம் செய்யாது என்றே தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண தீவிரமாக முயன்று வருகிறது.

அதன்படி, சாம்பியன்ஸ் டிராபி 2025க்கு முன்னதாக இறுதி ஆய்வு நடத்த ஐசிசியின் பிரதிநிதிகள் குழு சமீபத்தில் பாகிஸ்தானுக்குச் சென்றது.

இதற்கிடையே, போட்டியின் அட்டவணை குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் (பிசிபி) ஐசிசி கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக லாகூரில் நடைபெறவிருக்கும் இந்தியாவின் போட்டிகள் குறித்தும் ஆலோசிக்கிறது.

ஒருவேளை, பாகிஸ்தானுக்குச் செல்ல இந்திய அரசாங்கம் ஒப்புதல் அளிக்காத பட்சத்தில், அவசரத் திட்டங்கள் என்னவென்பது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

“இந்திய அணி லாகூரில் தங்கியிருந்து அனைத்து போட்டிகளிலும் விளையாடவிருப்பதால், தற்காலிக அட்டவணை தயாரிப்பது மிக முக்கியமானது. இந்திய அணிக்கான ஐசிசி பாதுகாப்பு மேலாளரைக் கொண்ட தூதுக்குழு, பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளிடம் பாதுகாப்பு தொடர்பான தேவையான விளக்கங்களைப் பெறுவார்கள்” என்று ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பாகிஸ்தானில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, ​​ஐசிசி தலைமை நிர்வாகி ஜியோஃப் அலார்டிஸ் பேசுகையில், “சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இடத்தை மாற்றும் எண்ணம் தற்போது இல்லை” என்று உறுதிப்படுத்தினார்.

மேலும் “தற்போது வரை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவருகிறது. ஐசிசியின் ஆய்வுக் குழு பாகிஸ்தானுக்கு பலமுறை சென்று ஆய்வுசெய்துள்ளது. எதிர்காலத்திலும் இது தொடரும்” என்றும் அலார்டிஸ் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த நேரப்படி, சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் பாகிஸ்தானில் நடைபெறாது என்பதற்கான எந்தத் தகவலும் எங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை” என்றும் அலார்டிஸ் கூறினார்.

Ads
Recent Sports News
Trending News
Recent News
Prev
Next