லெபனானில் வெடித்த ஒவ்வொரு பேஜரிலும் 3 கிராம் அளவுக்கு வெடிமருந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்!

hezbollah-pager-blast-in-lebanon-hezbolla-said-isreal-is-behind-this
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-09-18 20:40:00

லெபனானில் வெடித்த ஒவ்வொரு பேஜரிலும் 3 கிராம் அளவுக்கு வெடிமருந்தை இஸ்ரேல் உளவு அமைப்பு வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் நடந்துவரும் நிலையில், நேற்று (17ம் தேதி) பிற்பகல் 4 மணியளவில் லெபனானில் அடுத்தடுத்து ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்களின் ஆயிரக்கணக்கான பேஜர்கள் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதற பலர் பலத்த காயமடைந்தனர். கையில், உடையில், பையில் வைத்திருந்த பேஜர்கள் வெடித்ததில் பலரும் ரத்தக் காயமடைந்து கதறினர். மருத்துவமனைகளில் மரண ஓலம் ஒலித்தது.

இந்தத் தாக்குதலில் 10 வயது சிறுமி, ஹிஸ்புல்லா அமைப்பினர் என 12க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் மூன்றாயிரம் பேர் காயமடைந்து இருக்கின்றனர். இதில், 200 பேருக்கும் மேல் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கின்றனர்.

இந்த தாக்குதலில், ஈரான் தூதர் முஜூதாபா அமானி காயமடைந்ததாகவும், ஹிஸ்புல்லா பிரதிநிதி அலி அம்மாரின் மகன் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சைபர் தாக்குதல் மூலம் பேஜர்களின் லித்தியம் பேட்டரிகள் அதிக வெப்பமடைய வைத்து வெடிக்க வைக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது.

இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என்று ஹெஸ்புல்லா அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு பதிலடி கொடுப்போம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த சதிச்செயல் நன்கு திட்டமிடப்பட்டு பல மாதங்களுக்கு முன்பே தயார் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட் இந்த சதித்திட்டத்தை தீட்டியிருக்கலாம் எனவும் குற்றச்சாட்டப்படுகிறது. மேலும் ஒவ்வொரு பேஜரிலும் 3 கிராம் அளவுக்கு வெடிமருந்தை இஸ்ரேல் உளவு அமைப்பு வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பேஜர்களை தயாரிக்கும் போதே, இஸ்ரேல் உளவாளிகளின் உதவியுடன் அதில் வெடிபொருள் வைக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஸ்கேனர் உள்ளிட்ட எந்த கருவியாலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இது வடிவமைக்கப்பட்டிருந்ததாகவும், ரகசிய குறியீடு மூலம் பிசிபி ஃபோர்டு இயங்க தொடங்கிய சில நொடிகளில் வெடிமருந்து பேட்டரியுடன் சேர்ந்து வெடிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்து இஸ்ரேல் தரப்பில் எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

Ads
Recent International News
Trending News
Recent News
Prev
Next