மக்களுக்கு யானை இறைச்சி.. நமீபியாவை தொடர்ந்து ஜிம்பாப்வே முடிவு.. காரணம் என்ன?

zimbabwe-to-cull-200-elephants-to-feed-people
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-09-18 17:36:00

ஜிம்பாப்வேயில் நிலவும் கடும் வறட்சிக் காரணமாக யானைகளை கொன்று அதன் இறைச்சியை மக்களுக்கு உணவாக அளிக்க அந்நாட்டு அரசுத் திட்டமிட்டுள்ளது.

எல் நினோ காலநிலை காரணமாக ஆப்பிரிக்க நாடுகளில் இந்த ஆண்டு மிக கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், கடந்த நான்கு சகாப்தங்களில் இல்லாத மோசமான வறட்சி என்று இதனை குறிப்பிடுகின்றனர். வறட்சி காரணமாக நமீபியா, ஜாம்பியா, ஜிம்பாப்வே மற்றும் மலாவி உள்ளிட்ட நாடுகளில் சில மாதங்களுக்கு முன்பு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. கடுமையான வறட்சியால் பசி கொடுமையை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். வறட்சியால் 68 மில்லியன் மக்கள் பாதிப்புகளை சந்தித்துள்ள நிலையில், ஆப்பிரிக்க பிராந்தியத்தின் பெரும் பகுதியில் உணவு பற்றாக்குறை நிலவிவருகிறது.

இத்தகைய சூழலில் தான் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு யானைகளை கொன்று உணவளிக்க ஜிம்பாப்வே அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, 200 யானைகளை கொல்ல திட்டமிட்டுள்ளதாக ஜிம்பாப்வே அரசின் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு 50 யானைகள் கொல்லப்பட்ட நிலையில், தற்போது 200 காட்டு யானைகளை கொல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வேயின் அண்டை நாடான நமீபியா கடந்த மாதம் 83 யானைகளை கொன்று அதன் இறைச்சியை வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகித்தது என்பது குறிப்பிடத்தக்கது. வனவிலங்கு வேட்டை என்பது வறட்சியை மையப்படுத்தி மட்டும் கிடையாது என்கிறது ஜிம்பாப்வே அரசு. இதற்கான மற்ற காரணங்களையும் குறிப்பிட்டுள்ளது.

ஜிம்பாப்வே, ஜாம்பியா, போட்ஸ்வானா, அங்கோலா மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளில் பரவியுள்ள காடுகளில், சுமார் 2,00,000-க்கும் மேற்பட்ட யானைகள் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் உலகளவில் மிகப்பெரிய யானை மக்கள் தொகை வசிக்கும் இடமாகும். 55,000 யானைகளை மட்டுமே தாங்கக்கூடிய பூங்கா ஒன்றில் 84,000 யானைகள் உள்ளன. இதனால் நெரிசல் போன்ற வேறு பிரச்சினைகளும் ஏற்படுகின்றன என்கின்றனர் வன அதிகாரிகள்.

மேலும், கடுமையான வறட்சி நிலவிவரும் போது, அதனை சமாளிக்க இயற்கை வளங்கள் பற்றாக்குறையாக இருக்கின்றன. எனவே மனித - வனவிலங்கு மோதல்கள் அதிகரிக்கும் அச்சமும் நிலவி வருகிறது. கடந்த ஆண்டு ஜிம்பாப்வேயில் யானைகள் தாக்கியதில் 50 பேர் உயிரிழந்தனர் என்றும் புள்ளி விவரங்களை அடுக்கியுள்ளனர் அந்த அதிகாரிகள்.

எனவேதான் அரசு வேட்டையாடும் நடவடிக்கையை எடுக்க முன்வந்துள்ளது. வேட்டை, மேய்ச்சல் பகுதி மற்றும் தண்ணீர் வளத்தை விட விலங்குகள் அதிகமாக இருக்கும் பகுதிகளை இலக்காகக் கொண்டிருக்கும் என்று ஜிம்பாப்வே வனத்துறை தெரிவித்துள்ளது.

Ads
Recent International News
Trending News
Recent News
Prev
Next