இலங்கை தேர்தல்; பொதுவேட்பாளருக்கு ஆதரவு தர மறுத்த தமிழரசு கட்சி!

who-will-won-in-sri-lanka-presidential-election
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-09-18 16:26:00

இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று (18ம் தேதி) நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. வரும் 21ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. 38 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்தத் தேர்தல் நான்கு முனை தேர்தலாக பார்க்கப்படுகிறது.

இல்ங்கையில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த கோட்டாபய ராஜபக்ஸ, தன்னை எதித்து போட்டியிட்ட சஜித் பிரேமதாசவைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து அவர் இலங்கையின் அதிபர் பதவியில் அமர்ந்தார். ஆனால், 2022ல் இலங்கையின் பொருளாதாரம் மிகப் பெரிய சரிவைச் சந்தித்ததும், மக்களின் அன்றாட வாழ்வே கேள்விக்குறியானது. இதனால், அங்கு மக்கள் போராட்டம் வெடித்து, புரட்சியாக மாறியது. இந்தப் புரட்சியின் இறுதியில், கோட்டாபய ராஜபக்ஸ இலங்கையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தப்பி சென்றார்.

இந்த நிகழ்வுக்கு பிறகு நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம், ரணில் விக்ரமசிங்க இலங்கையின் 9வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பின்னணியில் தற்போது, இலங்கையின் 10 அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிட்ட இருந்த நிலையில், சுயேச்சை வேட்பாளர் முகமது இலியாஸ் திடீரென மரணமடைந்தார். இதனையடுத்து தற்போது இலங்கை அதிபர் தேர்தலில் 38 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். இருந்தாலும், முக்கியமான நான்கு நபர்களைச் சுற்றியே இலங்கை தேர்தல் விறுவிறுப்பும், முக்கியத்துவமும் அடைந்திருக்கிறது.

இலங்கையின் தேர்தல் களமும் வழக்கமான நிலையில் இல்லாமல், பல்வேறு முக்கிய மாற்றங்களைச் சந்தித்துள்ளது. கடந்த 20 வருடங்களாக இலங்கையில் தங்களின் வலிமையை நிருபித்துவந்த ராஜபக்ஸ சகோதரர்கள் இலங்கை பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு தாங்களும் பெரும் சரிவை சந்தித்துள்ளனர். இந்தப் பின்னணியில் அவர்கள் சார்பில் மகிந்த ராஜபக்ஸவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

அடுத்து இலங்கையில் வெகு ஆண்டுகாலமாக இருந்து வரும் ஸ்ரீலங்கா சுந்ததிரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் பெருமளவில் செல்வாக்கு செலுத்தக்கூடிய சக்திகளாக களத்தில் இல்லை. அதேசமயம், ஜனதா விமுக்தி பெரமுன தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி பெரும் அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்துவரும் ரணில் விக்ரமசிங்க, 2022ல் இருந்து தற்போதுவரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவுடன் அதிபராக இருந்துவந்தார். ஆனால், தற்போது அந்தக் கட்சி நாமல் ராஜபக்ஸவை வேட்பாளாராக அறிவித்துள்ளதால், ரணில் விக்ரமசிங்க சுயேச்சை வேட்பாளராக களம் இறங்குகிறார்.

இலங்கையில் தற்போது எதிர்க் கட்சி வரிசையில் இருக்கும் ஐக்கிய மக்கள் கூட்டணித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மற்றொரு எதிர் கட்சியான ஜே.வி.பி. தலைவராக இருக்கும் அனுரகுமார திஸநயகே ஆகியோரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இந்த வேட்பாளர்கள் எல்லாம் கவனம் பெற்றுள்ள அதேசமயத்தில், அதிபர் தேர்தலில் தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பா. அரியநேத்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளராக பா.அரியநேத்திரன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிரதான கட்சியாகவும், பா.அரியநேத்திரன் உறுப்பினராக இருக்கும் கட்சியுமான தமிழரசு கட்சி ஐக்கிய மக்கள் கூட்டணித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தற்போது உள்ள நிலவரப்படி, நாமல் ராஜபக்ஸ மற்றும் பா. அரியநேத்திரன் ஆகியோரைவிட சஜித் பிரேமதாஸ, அனுரகுமார திஸநயகே, ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையே தான் அதிக போட்டி இருக்கும் என சொல்லப்படுகிறது.

Ads
Recent International News
Trending News
Recent News
Prev
Next