இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்களின் ஆதரவு யாருக்கு? களம் நிலவரம் என்ன?

srilanka-presidential-election-2024-whom-to-favour-tamil-voters-field-reports
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-09-18 16:52:00

இலங்கை அதிபர் தேர்தல் வரும் சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. 4 முனை போட்டி ஏற்பட்டுள்ள இந்த தேர்தலில் தமிழர்களுடைய ஆதரவு எந்த கட்சிக்கு இருக்கும் என்பதை பார்க்கலாம்.

இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக சனிக்கிழமை (செப்டம்பர் 21) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒவ்வொரு முறையும் மக்கள் பெரும் நம்பிக்கையுடன் உள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னர் இலங்கையில் இடம்பெறும் முதலாவது தேர்தல் இது என்பதால் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

நான்கு முனை போட்டி இந்த தேர்தலில் காணப்படுகிறது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயேச்சை வேட்பாளராகவும், ஏகேடி என அழைக்கப்படும் மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சமகி ஜன பலவேகய (எஸ்ஜேபி) கட்சியின் நமல் ராஜபக்ச ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதில் தமிழர்கள் யாருக்கு ஆதரவு தரப்போகிறார்கள் என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. இலங்கையின் யாழ்ப்பாணம் - A9 நெடுஞ்சாலையானது, சிங்கள கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் தொட்டிலான கண்டியை தமிழ் கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் பிறையான யாழ்ப்பாணத்துடன் இணைக்கிறது. 321 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த அழகிய நெடுஞ்சாலை, இலங்கையின் நடுவில் சென்று, நாட்டை செங்குத்தாகப் பிரிக்கிறது. 2009 இல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படும் வரை இது ‘‘மரணத்தின் நெடுஞ்சாலை’’ என்று அறியப்பட்டது. இன்னும் இங்கு நிலவும் ஆழமான இனப் பிளவுகளை விவரிக்க இதைவிட சிறந்த உருவகம் இருக்க முடியாது.

விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பிறகு, புவியியல் ரீதியாக தீவு ஒன்றாகிவிட்டது. ஆனால் அது இன்னும் மனரீதியாக பிளவுபட்ட தேசமாகவே உள்ளது.

யாழ்ப்பாணத்தைத் தலைநகராகக் கொண்ட வட மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தென்பகுதியில் வவுனியா நகரம் உள்ளது. 25 ஆண்டுகால உள்நாட்டுப் போரின்போது, வவுனியா இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது.

பிரச்சினை இல்லாமல் எல்லையை கடப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகள் என இரு தரப்பினரும் பல சோதனைச் சாவடிகள், பதுங்கு குழிகள், கண்காணிப்பு கோபுரங்களைக் கட்டி ஒரு பெரிய படைக் குழுவை நிறுத்தியிருந்தனர். மேலும் ஒருவர் நுழைவு அனுமதி அல்லது புலிகளின் விசாவைப் பெற வேண்டும்.

இப்போது இந்த நெடுஞ்சாலையில் எந்தவித கட்டுப்பாடும் இன்றி பயணிக்கலாம். வவுனியாவைத் தாண்டியவுடன் சாலையின் இருபுறமும் புதிய வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் உங்களை வரவேற்கின்றன. இந்த பகுதியில் டஜன் கணக்கான KFC மற்றும் Pizza Hut விற்பனை நிலையங்கள் உருவாகியுள்ளன.

குண்டும் குழியுமான சில இடிந்த கட்டிடங்கள் மட்டுமே இரத்தம் தோய்ந்த கடந்த காலத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.

ஈழப்போர் முடிவடைந்த பின்னர் யாழ்ப்பாணம் ஒரு வியத்தகு மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. ஒரு காலத்தில் பேய் நகரம் என்று அழைக்கப்பட்ட இந்த பகுதி இப்போது மக்கள் மற்றும் வணிக நடவடிக்கைகளால் பரபரப்பாக உள்ளது. அச்சுறுத்தும் இராணுவ சோதனைச் சாவடிகளும், போலீஸ் நிலையங்களும் காணாமல் போயுள்ளன. யாழ்ப்பாணக் குடாநாட்டில் போக்குவரத்துப் போலீசாரை தவிர வேறு எங்கும் இராணுவத்தினரையோ போலீசாரை அதிகம் காண முடியாது.

ஆனால் உள்ளூர் தமிழ் சமூகம் இன்னும் அதிர்ச்சியில் இருப்பதாகவே தெரிகிறது. யாழ்ப்பாணத்தில் வசிக்கும் மக்கள் வேலையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வருவதில்லை. வணிகப் பகுதிகளைத் தவிர, யாழ்ப்பாணத்தின் பிற பகுதிகளில் அவர்கள் நகரம் பெரும்பாலும் அமைதியாக இருக்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முடிவுக்குப் பின்னர் நடைபெறும் நான்காவது ஜனாதிபதித் தேர்தல் இதுவாகும். ஆனால் தேர்தல் குறித்த உற்சாகம் தமிழர்கள் மத்தியில் இல்லை. பெரும்பான்மையான மக்கள் இந்த தேர்தலை அலட்சியமாக பார்க்கிறார்கள். அதைப் பற்றி அவர்கள் பேசக்கூட விரும்பவில்லை.

தமிழ் அரசியல் கட்சிகளும் தங்களது பெயரளவிலான வேட்பாளரை ஆதரிப்பதா அல்லது வெற்றிபெறக்கூடிய சிங்கள வேட்பாளர்களில் ஒருவரை ஆதரிப்பதா என்ற குழப்பத்தில் உள்ளதாகவே தெரிகிறது.

சில தமிழ் கட்சிகள் பொது வேட்பாளராக ப.அரியநேத்திரனை களமிறக்கியுள்ளன. அதேநேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கை தமிழ் அரசு கட்சி ஆகிய கட்சிகளுக்கும் இது தொடர்பாக கருத்து வேறுபாடு காணப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான எம்.ஏ.சுமந்திரன் SJBயின் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். ஆனால் அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் அனைவரும் அவர் கருத்துக்கு உடன்படவில்லை.

ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்க மற்றும் நமல் ராஜபக்சே ஆகிய நான்கு முக்கியப் போட்டியாளர்களும் தமிழ் வாக்குகளைக் கோரி யாழ்ப்பாணத்திற்குச் சென்றுள்ளனர். அநுரவுக்கும் நமலுக்கும் இது ஒரு மரியாதை நிமித்தமான பயணமாகவே இருந்தது. அங்கு அவர்களுக்கு ஆதரவில்லை. ஆனால் ரணிலும் சஜித்தும் தமிழர் வாக்குகளை பெறுவதற்கு கடுமையாக பரப்புரை மேற்கொள்கின்றனர்.

தேர்தலின்போது, பெரும்பான்மை வாக்காளர்களின் ஆதரவு கிடைக்காமல் போய்விடும் என்பதற்காக பயந்து, தமிழர்களுக்கு தேசத்தில் உரிய பங்கு மறுக்கப்பட்டது என்பதை எந்த ஒரு சிங்கள அதிபர் வேட்பாளரும் ஒப்புக்கொள்ளவில்லை. யாழ்ப்பாணத்தில் அவர்கள் சொல்லும் வாக்குறுதிகள் தலைநகர் கொழும்பு திரும்பியதும் மறந்துவிடும்.

மொத்த சனத்தொகையான 22 மில்லியன் (2.20 கோடி) மக்களில் சுமார் 15% வீதமான இலங்கைத் தமிழர்கள் எதிர்காலத்தில் பேரம் பேசும் சக்தியைத் தக்கவைத்துக்கொள்ள கடந்த காலங்களில் வாக்களித்துள்ளனர். 2005 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் தமிழர்கள் தேர்தலை புறக்கணிக்க வற்புறுத்தியிருந்தனர். ஒருவேளை தமிழர்கள் வாக்களித்திருந்தால் அப்போது ரணில் விக்ரமசிங்கே அதிபர் ஆகியிருக்கலாம்.

யுத்தம் முடிவடைந்த பின்னர், மகிந்த ராஜபக்ச அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக தமிழர்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர். அவர்கள் தங்கள் துயரத்திற்கு ராஜபக்ச குடும்பம்தான் பொறுப்பு என்கிறார்கள்.

எனினும் இம்முறை ஒருமித்த கருத்து இல்லை. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகிய இருவரும் தமிழர்களுக்கு வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றனர். தமிழர்கள் தங்களின் முழு பலத்தையும் அவர்களில் ஒருவருக்கு அளித்தால், சிங்கள ஆதரவாளரான ஜே.வி.பியின் அநுரகுமார திஸாநாயக்கவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க முடியும். ஆனால் வெற்றி வாய்ப்பு இல்லாத தம் சொந்த தமிழ் வேட்பாளருக்கு ஆதரவளிக்க பலர் விரும்புகிறார்கள்.

ஏமாற்றமடைந்த இளம் தமிழ் வாக்காளர்கள் தங்கள் சொந்த வேட்பாளரை ஆதரிக்க விரும்புகிறார்கள். அவர்களுக்கு ஈழப்போர் மற்றும் அது அவர்களின் பெற்றோருக்கு ஏற்பட்ட தாக்கம் பற்றிய நினைவுகள் இல்லை. ஆனால், சில பழைய வாக்காளர்கள், வெற்றிபெறக்கூடிய சிங்கள வேட்பாளரை விட, தங்கள் சொந்த வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது தற்கொலைச் செயலாகும் என்று கருதுகின்றனர்.

“இது ஒரு ஆபத்தான நடவடிக்கை. அநுராவை தோற்கடிக்க சஜித்துக்கோ அல்லது ரணிலுக்கோ தமிழர்களாகிய நாம் ஒற்றுமையாக வாக்களிக்க வேண்டும். நாங்கள் ஒற்றுமையாக வாக்களிக்கவில்லை என்றால், அரசியலில் பேரம் பேசும் சக்தியை இழந்துவிடுவோம். அது நம்மிடையே உள்ள ஆழமான பிளவை நிரந்தரமான விஷயமாக மாற்றிவிடும். இனி வருங்கால தேர்தல்கள் அனைத்தும் சிங்களத்திற்கு மட்டுமே சாதகமாக நடக்கும். அதில் தமிழர்களுக்கு எந்த பங்கும் இருக்காது” என்று தேர்தல் குறித்து யாழ்ப்பாணத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரியும் நிக்சன் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவின் மிதவாத கருத்துக்கள் மற்றும் நீண்டகால சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான அவரது முயற்சிகள் போன்றவற்றுக்காக அவருக்கு ஓரளவு ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்டகாலமாக ராஜபக்சே விசுவாசியும், பலம் வாய்ந்த தமிழ் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குடாநாட்டில் ரணிலுக்கு ஆதரவாக பரப்புரை செய்து வருகிறார். கொல்லப்பட்ட அதிபர் ரணசிங்க பிரேமதாசவை பெரும்பான்மையான தமிழர்கள் வெறுத்தாலும், அவரது மகன் சஜித்துடன் அவ்வாறான பிரச்சினைகள் எதுவும் இல்லை. அவரை நியாயமான மனிதராக பெரும்பாலானோர் காண்கிறார்கள்.

இலங்கையில் 70% சிங்கள வாக்காளர்கள் உள்ளனர், மீதமுள்ள 30% வாக்குகள் இலங்கைத் தமிழர்களிடையே 15%, மலையக தமிழர்கள் என்று அழைக்கப்படுவோரிடம் 4.5% மற்றும் முஸ்லிம்கள் கிட்டத்தட்ட 10% என பிரிந்துள்ளன.

அதிபர் தேர்தல் குறித்து இலங்கையின் வடக்கு முனையான பருத்தித்துறைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ராஜசிங்கம் கூறுகையில், “ஒவ்வொரு தேர்தலின்போதும் அல்லது தேசிய நெருக்கடியின்போதும் சிங்கள மக்கள் தேசியவாதத்தை முன்னிறுத்தி நாம் ஒரே நாடாக ஒன்றாக நிற்க வேண்டும் என்று கூறுகின்றனர். அது முடிந்தவுடன், அவர்கள் தங்கள் பழைய பெரும்பான்மை பேரினவாதத்திற்குத் திரும்பி, தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறார்கள். எந்த ஒரு சிங்கள வேட்பாளருக்கும் வாக்களிக்கக் கூடாது. நாம் எமது தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். ஆனால் அது நம்மை மற்றவர்களிடமிருந்து அந்நியப்படுத்தலாம்.”என்று தெரிவித்தார்.

வடக்கில் பெரும்பான்மையாக உள்ள சிறுபான்மை தமிழர்கள் அதிபரை தேர்வு செய்வதில் ஆழமாக பிளவுபட்டுள்ளனர் என்பதையே கள நிலவரம் சொல்கிறது.

Ads
Recent International News
Trending News
Recent News
Prev
Next