ஆன்லைனில் இப்படி தான் மோசடிகள் நடக்கிறது... அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியிட்ட ஸ்டேட் பேங்க்!
மோசடிக்காரர்கள் பொதுமக்களை ஏமாற்றுவதற்கு எந்தெந்த யுக்திகளை பயன்படுத்துகிறார்கள் என்பது சம்பந்தமான விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ளது. சைபர் கிரைம்கள் இந்தியா முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த சமயத்தில் SBI மக்களை எச்சரிக்கும் இந்த அற்புதமான வேலையில் ஈடுபட்டுள்ளது.
சைபர் கிரிமினல்கள் பயன்படுத்தும் 10 பொதுவான ட்ரிக்குகள் TRAI போன் மோசடி:
ஒரு சில சைபர் கிரிமினல்கள் தாங்கள் TRAI அதிகாரிகள் என்று கூறி, மொபைல் சேவைகளை துண்டித்து விடுவதாக பயமுறுத்தி, அதிகாரப்பூர்வமற்ற செயல்கள் அல்லது KYC ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி கேட்டு தனிநபர் விவரங்கள் மற்றும் பொருளாதார விவரங்களை பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் TRAI மொபைல் சேவைகளை ஒருபோதும் துண்டிக்காது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கஸ்டம்ஸ் துறையில் பார்சல்:
ஒரு சில மோசடிக்காரர்கள் குறி வைத்த நபர்களுக்கு போன் செய்து அவர்களுடைய பெயரில் ஒரு பார்சல் வந்திருப்பதாகவும், அதில் சட்டத்திற்கு புறம்பான பொருட்கள் இருப்பதாகவும், அதற்கான அபராதத்தை செலுத்தும் படி ஏமாற்றுகின்றனர்.
டிஜிட்டல் அரஸ்ட்:
இது துரதிஷ்டவசமாக சமீபத்தில் மிகவும் பிரபலமாக நடந்து வரும் ஒரு மோசடியாக இருக்கிறது. காவல்துறை அதிகாரிகள் மற்றும் நீதிபதிகளை போல நடித்து மோசடிக்காரர்கள் போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தி டிஜிட்டல் அரெஸ்ட் செய்கின்றனர். ஆனால் உண்மையில் போலீஸ் அதிகாரிகள் எந்தவிதமான டிஜிட்டல் அரெஸ்ட் அல்லது ஆன்லைன் விசாரணையில் ஈடுபடுவது கிடையாது.
குடும்பத்தாரை கைது செய்திருப்பதாக மோசடி:
இந்த வகையான மோசடியில் மோசடிக்காரர்கள் போன் செய்து குடும்ப உறுப்பினர் அல்லது உறவினரை கைது செய்திருப்பதாகவும் அடுத்தடுத்த செயல்முறைகளை செய்வதற்கு தேவையான பேமெண்ட் செலுத்தும் படியும் கேட்கின்றனர்.
டிரேடிங்:
குறிப்பிட்டசில ஸ்டாக்குகளில் முதலீடு செய்து அளவுக்கடந்த ரிட்டன்களை பெறுவது சம்பந்தமான பல விளம்பரங்கள் குறிப்பாக சோஷியல் மீடியாவில் வலம் வருகிறது. இவற்றில் பெரும்பாலானவை மோசடிகள் தான்.
எளிமையான ஆன்லைன் வேலைகளை செய்து வருமானம் ஈட்டும் மோசடி:
ஒரு சில மோசடிக்காரர்கள் உங்களிடம் சிறிய டாஸ்குகளை செய்ய சொல்லி, அதற்கு உங்களுக்கு பெரிய அளவில் பணம் தருவதாக கூறுவார்கள். ஆனால் அதற்கு நீங்கள் ஒரு செக்யூரிட்டி டெபாசிட் செலுத்த வேண்டும் என்பதே அவர்களுடைய மோசடியாக இருக்கிறது.
உங்களுடைய பெயருக்கு லாட்டரி:
ஒருவேளை உங்களுக்கு நீங்கள் லாட்டரி வென்றிருப்பதாக மெசேஜ் அல்லது இமெயில் பெற்று அதற்கு உங்களுடைய வங்கி கணக்கு விபரங்கள் அல்லது செக்யூரிட்டி டெபாசிட் செலுத்தும்படி கேட்டால் அது நிச்சயமாக ஒரு மோசடிதான்.
தவறுதலாக பணம் ட்ரான்ஸ்ஃபர்:
திடீரென்று உங்களுக்கு ஒருவர் போன் அல்லது மெசேஜ் செய்து தவறுதலாக உங்களுடைய அக்கவுண்டில் பணத்தை கிரெடிட் செய்து விட்டதாகவும், அதனை மீண்டும் தங்களுடைய அக்கவுண்டுக்கு அனுப்புமாறு கேட்டால் அது மோசடியாக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
காலாவதியான KYC:
ஒரு சில மோசடிக்காரர்கள் உங்களுக்கு போன் கால் அல்லது லிங்குகளை அனுப்பி வங்கி ஊழியர்களைப் போல நடித்து KYC அப்டேட்டுகளை செய்யும்படி கேட்கின்றனர். ஆனால் உண்மையில் வங்கிகள் KYC அப்டேட்டுகளுக்கு போன் கால் அல்லது லிங்குகளை அனுப்புவது கிடையாது.
டேக்ஸ் ரீஃபண்ட்:
ஒரு சில மோசடிக்காரர்கள் வரித்துறை அதிகாரிகளை போல நடித்து வங்கி விவரங்களை கேட்டு உங்களுக்கு டேக்ஸ் ரீஃபண்ட் வந்து இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் வரி துறையினரிடம் ஏற்கனவே உங்களுடைய வங்கி விவரங்கள் இருக்கும் என்பதால் அவர்கள் இந்த மாதிரி தகவல்களை கேட்பதற்கு வாய்ப்பு கிடையாது. மேலும் அவர்கள் உங்களை நேரடியாக தொடர்பு கொள்வதற்கான சாத்தியங்களும் குறைவு.