இந்திய அணி இன்னும் முன்னேறவில்லை - முன்னாள் வீரர் அதிருப்தி

indian-team-has-not-progressed-yet-former-player-unhappy
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-12-23 22:15:00

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அடுத்ததாக அடிலெய்டில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது.

இதனையடுத்து பிரிஸ்பேனில் மழை பாதிப்புக்கு மத்தியில் நடைபெற்ற 3-வது போட்டி டிராவில் முடிந்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இந்த தொடரில் முதல் போட்டியில் மட்டுமே இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக அமைந்தது. ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணியினர் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறி வருகின்றனர். குறிப்பாக முதல் போட்டியில் சதமடித்த ஜெய்ஸ்வாலும், விராட் கோலியும் அதற்கடுத்த போட்டிகளில் விரைவில் ஆட்டமிழந்தனர். ரோகித், பண்ட் போன்ற முன்னணி வீரர்களும் சோபிக்கவில்லை. இது இந்திய அணிக்கு பெருத்த பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி ஒயிட்வாஷ் ஆனதாக (0-3) முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் கூறியுள்ளார். ஆனால் அதிலிருந்து இன்னும் இந்திய பேட்ஸ்மேன்கள் முன்னேறவில்லை என்று அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இந்திய அணியில் அடிக்கடி சரிவு ஏற்படுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிராக சமீபத்தில் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் இந்தியா சரிந்ததை பார்த்தோம். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற பின்பும் அதே சரிவு தொடர்கிறது. இது அதிகப்படியான அழுத்தத்தின் கீழ் அதிரடியான ஆட்டத்தால் ஏற்படுகிறது என்று நான் நம்பவில்லை.

டெஸ்ட் கிரிக்கெட்டில் கட்டுப்பாட்டுடன் பேட்டிங் செய்த போதெல்லாம் இதே இந்திய பேட்ஸ்மேன்கள் கடந்த காலங்களில் அசத்தியுள்ளார்கள். எனவே இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் தங்களுக்கு தாங்களே அனுமதித்து விளையாட வேண்டும். ஏனெனில் அவர்களிடம் திறன் இருக்கிறது. அவர்கள் கட்டுப்பாட்டுடன் பேட்டிங் செய்தால் எங்கு வேண்டுமானாலும் அசத்த முடியும்" என்று கூறினார்.

Ads
Recent Sports News
Trending News
Recent News
Prev
Next