அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல்: பின்னணியில் முதல்-மந்திரி ரெவந்த் ரெட்டியா..? அதிர்ச்சி தகவல்
ஐதராபாத்,
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2'திரைப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 5-ம் தேதி வெளியானது. வசூல் ரீதியாக இந்தப் படம் சாதனை படைத்து வருகிறது. முன்னதாக இந்தப் படத்துக்கு தெலுங்கானா அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்திருந்தது.
அதன்படி கடந்த 4-ம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடந்த சிறப்புக் காட்சியைப் பார்க்கச் சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்ததால்தான் நெரிசல் ஏற்பட்டது என்பதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே உயிரிழந்த ரேவதி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்குவதாக நடிகர் அல்லு அர்ஜுன் அறிவித்திருந்தார். இதனிடையே கடந்த 13-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஜாமீன் பெற்று சிறையில் இருந்து அவர் வெளிவந்தார். இந்த சூழலில் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, நடிகர் அல்லு அர்ஜுனின் வருகை தான் கூட்ட நெரிசலுக்கு காரணம் என குற்றம் சுமத்தினார்.
இந்த சூழலில் நேற்று உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் அமைப்பு அல்லு அர்ஜுனின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது வீட்டினை மாலை 4.45 மணி அளவில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அவர் வீட்டில் இருந்த பூத்தொட்டிகளை சேதம் செய்தனர். அதோடு கற்கள் மற்றும் தக்காளியை கொண்டு வீட்டினை தாக்கினர். அவரது வீட்டின் சுற்றுச்சுவர் மீதேறியே போராட்டக்காரர்கள், அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "திரையுலக பிரபலங்களின் வீடுகள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். சட்டம்-ஒழுங்கு விஷயத்தில் மாநில டி.ஜி.பி. மற்றும் நகர போலீஸ் கமிஷனர் கடுமையாக செயல்பட உத்தரவிடுகிறேன். இந்த விஷயத்தில் எந்த அலட்சியத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாது. சந்தியா தியேட்டர் சம்பவத்தில் தொடர்பில்லாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க உயர் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்" என்று அதில் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி பதிவிட்டிருந்தார்.
இந்த சூழலில் நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டிற்குள் புகுந்து சொத்துகளை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு ஐதராபாத் கோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சந்தேக நபர்களில் ஒருவரான ரெட்டி ஸ்ரீனிவாஸ் என்பவர் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியின் உதவியாளர் என்று பி.ஆர்.எஸ். தலைவர் ஒருவர் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு ரேவந்த் ரெட்டியோ, காங்கிரஸ் தலைவர்களோ இதுவரை பதில் அளிக்கவில்லை.
நடிகர் அல்லு அர்ஜுன் வீடு தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உள்ளதாக வெளியான தகவலால், தெலுங்கானா மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.