சடலுத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல… உயர்நீதிமன்றம் பரபரப்பு கருத்து
சடலத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமையாக கருதப்படுமா என்பது குறித்து சட்டீஸ்கர் உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள கரியாபந்து மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு 9 வயது சிறுமி மாயமானார். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டு அந்த சிறுமி தேடப்பட்டு வந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். இந்த விவகாரத்தில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்தன.
சிறுமி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இந்த வழக்கில் நீல் காந்த் நாகேஷ் மற்றும் நிதின் யாதவ் என்பவர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக இருவர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் சிறுமியை கடத்தி பாலியல் உறவு கொண்டு அவரை கொலை செய்தது தெரியவந்துள்ளது. சிறுமி உயிரிழந்த பின்னரும் அவருடன் இருவரும் உடலுறவு வைத்திருந்ததாக பிரேத பரிசோதனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சட்டீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரமேஷ் சின்ஹா மற்றும் பிரபு தத்தா குரு முன்னிலையில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கு குறித்து நீதிபதிகள் கூறியதாவது-
ஒரு நபரின் இறந்த உடலுடன் உடலுறவில் ஈடுபடுவது என்பது நினைத்துப் பார்க்க முடியாத மிகக் கொடூரமான செயல்களில் ஒன்றாகும், ஆனால் அந்தக் குற்றமானது இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 376 இன் கீழ் அல்லது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதன் கீழ் வராது. சடலத்துடன் உடலுறவு வைத்துக் கொள்வதை பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது.
என்று தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மற்ற தண்டனை சட்டங்களின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டாலும், சடலத்துடன் உடலுறவு கொண்டதை பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது என்று நீதிபதிகள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.