தமிழக அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்பது வதந்தி - அரசு விளக்கம்

rejection-of-tamil-nadu-float-is-a-rumor-government-explanation
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-12-23 07:13:00

சென்னை,

டெல்லியில் ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில், முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். இதில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், பல்வேறு துறைகள் மற்றும் துணை ராணுவத்தின் அலங்கார ஊர்திகள் இடம்பெறும். அந்தவகையில் 2025 ஜனவரி 26 ஆம் தேதி, டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாக் கொண்டாட்டத்தில் 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுக்க உள்ளன.

இந்த பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறவில்லை. இது தமிழ்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஜனவரி 26ல் நடைபெறும் குடியரசு தின கொண்டாட்டத்தில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி இடம்பெறாதது குறித்து, தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

இந்த நிலையில், "குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்று வதந்தி பரப்பப்படுகிறது" என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்து இருப்பதாவது;

"2025 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில், தலைநகர் டெல்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிப்பட்டதாகப் பரப்பப்படுகிறது. இது முற்றிலும் தவறான தகவல். 2025ம் ஆண்டு அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்தி பங்கேற்க இயலாது.

டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் 15 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அணிவகுப்பு அலங்கார ஊர்தி பங்கேற்க தேர்வு செய்யப்படும். ஆனால், சுழற்சி முறையில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அனைத்து மாநிலங்களாலும் எல்லா ஆண்டுகளிலும் பங்கேற்க இயலாது. 2024 அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி பங்கேற்றது. இனி அடுத்த 2026 ஆண்டு அணிவகுப்பிலே பங்கேற்க இயலும். ஆனால், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாகத் தவறான தகவல்கள் பரவி வருகிறது. வதந்தியைப் பரப்பாதீர்!" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next