சாம்சங் கேலக்ஸி எஸ்25 தொடர் விவரங்கள் கசிவு: வெளியீட்டு தேதி, தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்! 

samsung-galaxy-s25-series-details-leak-nw-azt
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-12-22 21:56:00

சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு நடக்கவிருக்கும், சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வில் கேலக்ஸி எஸ்25 தொடரை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், ஜனவரி 2025 இறுதிக்குள் இந்த நிகழ்வு நடக்கும் என்று நிறுவனத்திற்கு சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்மார்ட்போன் உலகில் ஓர் முக்கிய தடம் பதித்திருக்கும் சாம்சங் நிறுவனம், ஒவ்வொரு ஆண்டு ஜனவரி மாதமும் தனது சாம்சங் கேலக்ஸி எஸ் தொடரின் அடுத்த ஜெனரேஷனை வௌியிடும். அதேபோல், இந்த முறை சாம்சங் கேலக்ஸி எஸ்25 தொடரை, சாம்சங் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகளவில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் ஜனவரி வெளியீடு குறித்து பல்வேறு தகவல்கள் கசிந்திருந்தாலும், சமீபத்திய தகவல்கள் அதன் வெளியீடு குறித்த நம்பகமான தகவலை வெளிப்படுத்துகிறது. சமீபத்திய தகவல்படி, சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வை, ஜனவரி 22, 2025 அன்று நடத்த திட்டமிட்டுள்ளதாக டிப்ஸ்டர் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்வு 10AM PT (10:30 PM IST) மணிக்கு கலிபோர்னியாவின் சான் ஜோஸில் நடக்கும் என்று யூகிக்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 25, கேலக்ஸி எஸ் 25+ மற்றும் கேலக்ஸி எஸ் 25 அல்ட்ரா ஆகிய மூன்று கேலக்ஸி எஸ் 25 வரிசையின் ஸ்மார்ட்போன்களை இந்த நிகழ்வில் வெளியிட உள்ளதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வெளியீட்டு விவரங்களைத் தவிர்த்து, ப்ராஜெக்ட் மூகன் எக்ஸ்ஆர் (Moohan XR) ஹெட்செட் பற்றிய முன்னோட்டமும் இந்த நிகழ்வில் இடம்பெறலாம் என்று அந்த பதிவில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் சமீபத்தில் ஆண்ட்ராய்டு எக்ஸ்ஆருக்கான கூகுள் நிகழ்வில் அறிமுகமானது. ஹெட்செட்கள் மற்றும் ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கான புதிய ஆன்ட்ராய்டு ஓஎஸ் எக்ஸ்ஆரை கடந்த வாரம் கூகுள் அறிவித்தது. மேப்ஸ், போட்டோஸ் மற்றும் யூடியூப் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு அதிவேக அனுபவங்களை வழங்குவதை இந்த ஓஎஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது. குரோம் ப்ரவுசரில் பல டேப்களை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு வேலைகளை ஒரே நேரத்தில் எளிதாக செய்வதற்கான ஓர் அம்சமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு எக்ஸ்ஆர் இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நிலையில், ​​கூகுள் இந்த அம்சத்தை விரைவாக முடிப்பதில் உறுதியாக உள்ளதாக தெரிகிறது. அதேநேரத்தில், சாம்சங் உருவாக்கி இருக்கும் மூகான் 2025 இல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 தொடர்

கேலக்ஸி எஸ்25, கேலக்ஸி எஸ்25+ மற்றும் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஆகியவற்றைக் கொண்டுவரவிருக்கும் கேலக்ஸி எஸ்25 தொடர், பல்வேறு முக்கிய புதுப்பிப்புகளுடன் வாடிக்கையாளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. எனினும், சமீபத்திய தகவல்படி, கேலக்ஸி எஸ்24 தொடரைப் போலவே இதிலும், 45 வாட் வேகமான ஒயர்டு சார்ஜிங்கை கொண்டிருக்கும். இருப்பினும், நிலையான கேலக்ஸி எஸ்25 மாடலுக்கான வயர்லெஸ் சார்ஜிங்கில் குறிப்பிடத்தக்க மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது அதன் முந்தைய மாடல்களில் இருந்த 15 வாட்டுக்கு பதிலாக 9 வாட் மட்டுமே வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படை மாடல் அதன் 25 வாட் வேகமான சார்ஜிங் திறனை தக்க வைத்துக் கொள்ளும் என்று தெரிகிறது.

இதற்கிடையில், கேலக்ஸி எஸ்25+ மற்றும் எஸ்25 அல்ட்ரா ஆகியவை EP-T2510 என பெயரிடப்பட்ட பயண அடாப்டர்களைப் பயன்படுத்தும். இது 45 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை கொண்டிருக்கும். முந்தைய மாடல்களைப் போலவே, சாம்சங் பாக்ஸில் சார்ஜிங் அடாப்டர்களைச் சேர்க்காது, யூசர்கள் அவற்றைத் தனித்தனியாக வாங்க வேண்டும்.

மூன்று சாதனங்களிலும் 5G இணைப்பு, டூயல்-பேண்ட் ஒய்ஃபை, புளூடூத், ஜிஎன்எஸ்எஸ் (GNSS) மற்றும் என்எஃப்சி (NFC) ஆகியவை இடம்பெறும். இருப்பினும், அல்ட்ரா-வைட்பேண்ட் (UWB) ஆதரவு கேலக்ஸி எஸ்25+ மற்றும் எஸ்25 அல்ட்ரா மாடலில் மட்டுமே இருக்கும். கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவானது வாகோமால் (Wacom) உருவாக்கப்பட்ட எஸ் பென்னைக் (S Pen) (மாடல் EJ-PS938) கொண்டிருக்கும்.

இந்தத் தொடர் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மூலம் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங்கின் எக்ஸினோஸ் 2500 பிராஸசர்கள் குறைந்த அளவுவே கிடைப்பதால் எஸ்25 வரிசையில் இது இடம்பெற வாய்ப்பில்லை. அனைத்து மாடல்களும் ஆண்ட்ராய்டு 15 இல் ஒன்யுஐ 7 -ல் (OneUI 7) இயங்கும் என்பதை சாம்சங்கே உறுதிப்படுத்தியுள்ளது.

பேஸ் மற்றும் பிளஸ் மாடல்களில் குறிப்பிட்ட அளவிலான கேமரா மேம்பாடுகள் மட்டுமே இருக்கும், கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவானது அதன் அல்ட்ரா-வைட் கேமராவை தற்போதைய 12 மெகாபிக்சலுக்கு பதிலாக, 50 மெகாபிக்சல் சென்சாருக்கு மாற்றியமைக்கும் என மற்றொரு வதந்தி தீயாய் பரவி வருகிறது. இது அதன் பிரத்யேகமான 200-மெகாபிக்சல் மெயின் கேமரா மற்றும் மேம்பட்ட டெலிஃபோட்டோ லென்ஸ்கள் ஆகியவற்றைத் தக்க வைத்துக் கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.

வடிவமைப்பைப் பொறுத்தவரை, கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவானது அதன் முந்தைய மாடல்களின் ஸ்கொயர்-ஆஃப் டிஸ்ப்ளேவுக்கு பதிலாக பிளாட் டிஸ்பிளேவுடன் வருவதாகவும் மற்றொரு தகவல் பரவுகிறது. இந்த மாற்றம், அல்ட்ரா மாடலை ஸ்டாண்டர்ட் மற்றும் பிளஸ் வகைகளில் ஈர்க்கக்கூடியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கூடுதலாக, எஸ்25 அல்ட்ராவானது கேல்ஸி இசட் ஃபோல்டு 6 -ன் சில வடிவமைப்புகளுடன், எஸ்24 அல்ட்ராவைப் போன்ற ஐந்து கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா, எஸ்25, எஸ்25+: இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை

முந்தைய தலைமுறையுடன் ஒப்பிடும்போது கேலக்ஸி எஸ்25 சீரிஸ் ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. முந்தைய வரலாறுகளின் படி கணக்கிட்டால், கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவின் விலை சுமார் ரூ.1,34,999 ஆக இருக்கலாம், அதே சமயம் கேலக்ஸி எஸ்25+ மற்றும் கேலக்ஸி எஸ்25 விலைகள் முறையே ரூ.1,04,999 மற்றும் ரூ.84,999 ஆக இருக்கலாம். இந்த விலைகள் யூகிக்கப்பட்டவையே, இதன் அதிகாரப்பூர்வ விவரங்கள் மற்றும் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், சந்தையில் போட்டிக்காக சாம்சங் விலையை மாற்றாமலும் வைத்திருக்கலாம், குறிப்பாக, சாம்சங்கின் போட்டியாளரான ஆப்பிள் அதன் ஐபோன் 16 தொடருக்கான விலையை நிலையாக பராமரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Ads
Recent Technology News
Trending News
Recent News
Prev
Next