அரசு ஊழியரின் சொத்துகள், கடன்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல - சென்னை ஐகோர்ட்டு

assets-and-debts-of-a-government-employee-are-not-personal-details-chennai-high-court
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-12-23 19:27:00

சென்னை,

அரசு ஊழியரின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் அல்ல என்று சென்னை ஐகோர்ட்டு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வளத்துறை உதவிப் பொறியாளரின் சொத்து, கடன் விவரம் கேட்டு தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் சீனிவாசன் என்பவர் விண்ணப்பித்திருந்தார். ஆனால், இந்த தகவல்கள் அரசு ஊழியரின் தனிப்பட்ட விவரங்கள் என்றும், அவை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விலக்களிக்கப்பட்டவை என்றும் தகவல்கள் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பான உத்தரவை எதிர்த்து சீனிவாசன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு இன்று நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தகவல் உரிமைச் சட்டம் 8-வது பிரிவின் கீழ் சில தனிப்பட்ட தகவல்கள் வழங்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும், அரசுப் பணி சார்ந்த தகவல்களை வழங்கலாம் என்றும், அரசு ஊழியர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வது அடிப்படை உரிமை என்றும் வாதிட்டார்.

தொடர்ந்து நடந்த விசாரணையில், சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் அல்ல என்று கூறிய நீதிபதி, தகவல்கள் வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டதுடன், இந்த விவகாரத்தை மீண்டும் மாநில தகவல் ஆணையத்துக்கு அனுப்பி, சட்டப்படி மீண்டும் பரிசீலித்து இரண்டு மாதங்களில் முடித்து வைக்க உத்தரவு பிறப்பித்தார்.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next