ஆப்பிரிக்கா நாட்டை புரட்டிப்போட்ட 'சிடோ புயல்' - நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு
மபுதோ,
இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. 'சிடோ' என பெயரிடப்பட்ட இந்த புயல் கடந்த சில நாட்களாக கிழக்கு ஆப்பிரிக்கா அருகே கடலில் நிலை கொண்டது. இதனால் மலாவியில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் அங்கு ஊருக்குள் வெள்ளம் புகுந்து நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இந்தநிலையில் அண்டை நாடான மொசாம்பிக்கையும் 'சிடோ' புயல் தாக்கியது. இதனால் அங்கு கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நியாஸ்சா, கபோ டெல்கடோ உள்ளிட்ட கடலோர மாகாணங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. அங்குள்ள ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து தாழ்வான பகுதிகளுக்குள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
புயல் காரணமாக மொசாம்பிக் நாட்டில் 34 பேர் உயிரிழந்தனர். 300 பேர் படுகாயம் அடைந்தனர். 24 ஆயிரம் வீடுகள், 150 மீன்பிடி படகுகள் சேதம் அடைந்தன.
தென்னாப்பிரிக்கா ஏற்கனவே இந்த ஆண்டு வறட்சியால் தத்தளித்துக்கொண்டிருந்தநிலையில், இந்த புயல் ஆயிரக்கணக்கான மக்களை பட்டினியில் தவிக்க விட்டுள்ளது.