அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்: ராகுல் காந்தி
புதுடெல்லி,
தொழிலதிபர் கவுதம் அதானி, தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் அமெரிக்கா குற்றச்சாட்டு வைத்துள்ளது. இது, தொழில் துறையில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அதானிக்கு எதிராக ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது, அமெரிக்காவில் அவருக்கு எதிராக எழும்பியுள்ள புகார் இந்திய அரசியலிலும் விவாதப்பொருளாகியுள்ளது.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- அதானி மீது லஞ்ச புகார்கள் உள்ளபோதும் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் அவர் சுதந்திரமாக வலம் வருகிறார். இந்த புகாரில் பிரதமர் மோடிக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன;அதானி முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவை உடனே அமைக்க வேண்டும்.
தொழிலதிபர் அதானி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும், மேலும் அவரை பாதுகாத்துவரும் செபி தலைவர் மதாபி புச் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். பிரதமர் மோடி இருக்கும்வரை, அதானி இந்தியாவில் பாதுகாப்பாக இருப்பார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், அதானி முறைகேடு விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க குரல் எழுப்பப்படும். " என்று கூறியுள்ளார்.